திருவாடானை கோயிலில் மூலிகை ஓவியங்கள் ஆய்வு தினமலர் செய்தி எதிரொலி
திருவாடானை, திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் மூலிகை ஓவியங்கள் குறித்து ஆய்வு செய்யபட்டது. திருவாடானையில் பிரசித்தி பெற்ற ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலில் அழகிய மூலிகை ஓவியங்கள் உள்ளன. ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லிஅம்மன் கருவறை மண்டபத்தில் வரையப்பட்ட இந்த ஓவியங்கள் சிதைந்துள்ளதால் பக்தர்கள் கவலையடைந்தனர்.
வெளிமாவட்டங்களிலிருந்து செல்லும் பக்தர்களும் சிதைந்து போன மூலிகை ஓவியங்களை பார்த்து அதிருப்தியடைந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இச் செய்தியின் எதிரொலியாக இந்து அறநிலைய துறை ஆய்வாளர் வசந்தாள், தேவஸ்தான செயல்அலுவலர் சந்திரசேகர் ஆய்வு செய்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: மன்னர்கள் காலத்தில் இந்த அபூர்வ ஓவியங்கள் வரையப்பட்டது. தற்போது இந்த ஓவியங்களை மூலிகைகளால் புதுப்பிப்பது சிரமம். இருந்தபோதும் ஓவியங்களின் தன்மை குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பபடும் என்றனர்.