சிங்கம்புணரி திருக்கொடுங்குன்ற நாதருக்கு அன்னாபிஷேகம்
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதருக்கு ஐப்பசி
சதுர்த்தசி பவுர்ணமியை ஒட்டி அன்னாபிஷேகம் நடந்தது.
பாண்டிய நாட்டு 14 திருத்தலங்களில் 5வது சிறப்புக்குரியதாக விளங்கும் இக்கோயிலில்
சிவன் 3 நிலைகளில் காட்சி தருகிறார். முதல் நிலையில் லிங்கத்திருமேனியாக காட்சி தரும் திருக்கொடுங்குன்ற நாதருக்கு வெள்ளிக்கிழமை அன்னாபிஷேகம் நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்களைத் தொடர்ந்து அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.
சாதம், பச்சை காய்கறிகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. உமாபதி சிவாச்சாரியார் பூஜைகளை நடத்தி வைத்தார். இதில் ஏராளமான
பக்தர்கள் பங்கேற்று அன்னாபிஷேக அலங்காரத்தில் அருள்பாலித்த சிவனை வழிபட்டனர்.
இதே போல் சிவபுரிபட்டி சுயம்பிரகாச ஈஸ்வர் கோயில், அரளிப்பாறை குகை அண்ணா மலையார் கோயில் ஆகியவற்றில் உள்ள சிவலிங்கத்திற்கும் அன்னாபிஷேகம் நடந்தது.