உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுப்பொலிவுக்கு ஏங்கும் உத்தம சோழபுரம் கோவில்

புதுப்பொலிவுக்கு ஏங்கும் உத்தம சோழபுரம் கோவில்

சேலம் : சேலம்- கோவை ரோட்டில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த உத்தமசோழபுரம் கோவிலில், அடிப்படை வசதிகள் இல்லாததால், பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். சேலத்திலிருந்து, 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள உத்தமசோழபுரத்தில், 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதன சிறப்பு வாய்ந்த கரபுரநாதர் கோவில் அமைந்துள்ளது. சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் அவரவர் ஆட்சி காலத்தில் இக்கோவிலை புதுப்பித்தும், பல்வேறு வசதிகளை ஏற்படுத்தியும் பாதுகாத்து வந்ததாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கிறது.இக்கோவிலில் கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி மன்னரின் மகள்கள் அங்கவை மற்றும் சங்கவைக்கு, அவ்வையார் முன்னின்று திருமணம் நடத்தி வைத்ததாகவும் வரலாற்று செப்பேடுகள் தெரிவிக்கிறது.மூலிகை சித்துகளில் கைதேர்ந்தவரான காலங்கிரிநாதர் என்ற கரடிசித்தர், இக்கோவில் சிறப்பு குறித்து, தனது பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். பவுர்ணமி, பிரதோஷம் போன்ற விசேஷ நாட்களில் இக்கோவிலுக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.பல்வேறு வரலாற்று சிறப்பு வாய்ந்த இக்கோவிலை, இந்து அறநிலையத் துறை பராமரித்து வருகிறது. பல்வேறு கொடையாளர்களிடமிருந்து நன்கொடை பெறப்பட்டு, 74 லட்சத்துக்கு சுற்றுசுவர், தேர் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டிருந்தாலும், தற்போது பராமரிப்பு இல்லாமல், அனைத்தும் பாழடைந்த நிலையில் உள்ளது.கோவிலை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் நடைபாதை முழுவதும் அசுத்தங்கள் நிரம்பியுள்ளது. மேலும், கோவிலில் போதிய குடிநீர் இல்லாததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள போர்வெல் பழுதாகி நீண்ட நாட்களாகியும் சரி செய்யப்படவில்லை. கோவிலை சுற்றி புதர்கள் அடர்ந்துள்ளதால், விஷ ஜந்துக்கள் புகுந்து விடுகிறது. கோவில் கோபுரத்தின் மீது சக்திவாய்ந்த இடிதாங்கி பொருத்தவும், பழமை வாய்ந்த இக்கோவிலில் போதிய அடிப்படை மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்த வேண்டும், கோவிலுக்கு வெளியே திறந்த வெளியில் வைத்துள்ள அவ்வையாருக்கு அமைக்க வேண்டும், என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !