திருவண்ணாமலை தீப திருவிழா தேரோட்டம் மாட வீதியில் பாதாள சாக்கடை சீரமைக்கும் பணி தீவிரம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு, மாட வீதியில் பாதாள சாக்கடை மற்றும் சேதமடைந்த சாலைகளை, சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும், 23ல், கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாட்கள் தொடர்ந்து நடக்கும். வரும், 29ல், பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர் , உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேசுவரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர், ஆகியோர் தனித்தனி ரதத்தில் வீதி உலா வருவர். சுவாமி வீதி உலா வரும் மஹா ரதம், 10 டன் எடை கொண்டது. தினமும் விழா நாட்களில் காலை, மாலை என இரு வேளைகளிலும் சுவாமி வெவ்வேறு வாகனத்தில் மாட வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். தற்போது பெய்து வரும் மழையால், மாட வீதி சாலைகள் சேதமடைந்துள்ளன. எனவே, மஹா ரத தேரோட்டத்தின்போது, சாலையில் புதையாமல் இருக்க, கான்கிரீட் கம்பி கொண்டு, சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், பாதாள சாக்கடை கால்வாய் இணைப்புகளையும் சீர் செய்து வருகின்றனர்.