யோகி ராம் சுரத்குமாரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்
சென்னை: பகவான் யோகி ராம் சுரத்குமாரின் நுாற்றாண்டு விழா, நவ., 30ம் தேதி துவங்கி, அடுத்த ஆண்டு டிச., 2 வரை, ஓராண்டிற்கு வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இது குறித்து, யோகி ராம் சுரத்குமார் டிரஸ்ட் சார்பில் கூறியிருப்பதாவது: பகவான் யோகி ராம் சுரத்குமார் நுாற்றாண்டு விழா, ஓராண்டிற்கு கொண்டாடப்பட உள்ளது. எனவே, 2018ம் ஆண்டு முழுவதும், மாதந்தோறும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில், பிரபல கலைஞர்கள் மூலம் கலை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடத்தப்பட உள்ளன. ஆசிரமத்தில், மாதந்தோறும் இரண்டாவது ஞாயிறன்று, அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து, சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. பகவான் உருவம் பொறித்த, 10 மற்றும், 100 ரூபாய் நாணயம், சிறப்பு அஞ்சல் உறை வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது. ஆசிரம வளாகத்தில், நுாற்றாண்டு ஸ்துாபி திறக்கப்பட்டு, நுாற்றாண்டு சிறப்பு மலரும் வெளியிடப்படுகிறது. மேலும், 1,008 கோடி யோகி ராம் சுரத்குமார் நாம ஜப வேள்வி, நவ., 30ம் தேதி துவக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.