அண்ணமங்கலம் ஆதீஸ்வரன் கோவிலில் அறநிலையத்துறை தலைமை ஸ்தபதி ஆய்வு
செஞ்சி : அண்ணமங்கலம் ஆதீஸ்வரன் கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை தலைமை ஸ்தபதி ஆய்வு செய்தார். மேல்மலையனுார் தாலுகா, அண்ணமங்கலத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆதீஸ்வரன் கோவில் உள்ளது. கடந்த 1714 ம் ஆண்டு, செஞ்சி மீது படையெடுத்த ஆற்காட்டு நவாப் படையினர், இந்த கோவிலை சேதப்படுத்தினர். இந்த கோவிலை புதுப்பிக்க வேண்டும் என ஆரணி தொகுதி எம்.பி., ஏழுமலை கோரிக்கை விடுத்திருந்தார். இதையேற்று இந்து சமய அறநிலையத்துறையினர் கோவிலை புதுப்பிக்க ரூ. ஒரு கோடியே 43 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளனர். இதன் அடிப்படையில் கோவிலை புதுப்பிக்கும் வேலைகளை துவங்குவதற்காக, இந்துசமய அறநிலையத்துறை தலைமை ஸ்தபதி முத்தையா, ஆதீஸ்வரன் கோவிலை நேரில் பார்வையிட்டார்.விழுப்புரம் மாவட்ட மண்டல ஸ்தபதி ஜகநாதன், நந்தக்குமார், சென்னை ஸ்தபதி சீனுவாசன், எழுத்தாளர் சக்திவேல் ஆகியோர் உடனிருந்தனர்.இந்த குழுவினர் கோவிலின் காலம், கட்டமைப்பு, புதுப்பிக்க தயாரிக்கப்பட்டுள்ள வரைபடம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அண்ணமங்கலம் கிராமத்தைச் சார்ந்த தலைமை ஆசிரியர் முனுசாமி மற்றும் கிராம பிரமுகர்கள் உடன் இருந்தனர்.