உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆன்மிகம், பக்தியோடு செய்கிற மருத்துவ சேவை உயர்வானது!

ஆன்மிகம், பக்தியோடு செய்கிற மருத்துவ சேவை உயர்வானது!

திருக்கோவிலூர் : திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் 150வது இலவச மருத்துவ முகாம் துவக்க விழா, ஆசிரம வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. துவக்க விழாவில், ஆசிரம நிர்வாகி ஜஸ்டிஸ் டி.எஸ்.அருணாசலம் அனைவரையும் வரவேற்றார். "தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு, பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜ் உடன் தனக்கிருந்த 25 ஆண்டு கால அனுபவங்கள் குறித்து பேசினார். சென்னை ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா, சேவையாளர்களை ஊக்குவித்து, பாராட்டினார். இலவச மருத்துவ முகாமை முன்னின்று நடத்திய டாக்டர் டி.எஸ்.ராமநாதன், சாது போஜனத்தை வழி நடத்திய அனுவெண்ணிலா ஆகியோர் ஏற்புரையாற்றினர். இவ்விழாவில், ஆசிரம நிர்வாகி ஜஸ்டிஸ் டி.எஸ்.அருணாசலம் பேசியதாவது: தினமலர் நிறுவனர் ராமசுப்பையர் மிகுந்த தைரியசாலியாகவும், மக்களுக்காக சேவை செய்ய வேண்டியது தன் கடமை என்று எடுத்துக் கொண்டு, எல்லா மதத்தினரையும், எல்லா இனத்தினரையும் தாழ்வு பார்க்காமல் நடந்து கொள்ளும் பாரம்பரியத்தை உண்டாக்கி, தினமலர் நாளிதழை உருவாக்கினார்.அந்தப் பாரம்பரியத்தில் வந்தவர் தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி. அவர் என்ன சேவை செய்கிறார் என்பதை சுலபமாக புரிந்து கொள்ளலாம். அது, மாணவர்களுக்கு ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, அதுமட்டுமல்லாது எங்கெங்கெல்லாம் தர்மம், தர்ம காரியங்களைக் கட்டாயம் செய்வார்கள்.

இந்த ஆசிரம வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டு விழாக்களுக்கு முடிந்த வரை வந்து, கூட்டத்தில் அகப்படாமல் சுவாமியை தரிசனம் செய்து விட்டு போகும் எளிமையானவர் அவர். இன்று நமக்கெல்லாம் உண்மையான, நம்பத்தகுந்த செய்தி வேண்டும் என்றால் தினமலர் தான். நீதிபதி கே.என்.பாஷா ஐகோர்ட் பணிகளில் என்று அடியெடுத்து வைத்தாரோ அன்று முதல் எனக்கு அவரை நன்கு தெரியும். பாஷா தகப்பனார் கமாலுதீன் மாவட்ட நீதிபதியாக இருந்தவர், பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து வந்த இவர் கொடுக்கும் தீர்ப்புக்கு, உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் நல்ல பெயர் கிடைத்துள்ளது. இவ்வாறு ஜஸ்டிஸ் டி.எஸ்.அருணாசலம் பேசினார். சென்னை ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா பேசியதாவது : மருத்துவ முகாமில் கலந்து கொண்டு தொடர்ந்து பணியாற்றும் மருத்துவர்களைப் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். யோகி ராம்சுரத்குமார் சுவாமி பற்றி, பல ஆண்டுகளுக்கு முன் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். என் நண்பர்கள் அவரைப் பற்றி என்னிடம் நிறைய கூறி, அவரிடம் ஆசி பெற வருகிறாயா எனக் கேட்டனர். வந்தேன்; அந்த மகானை சிறிய குடிலில் பார்த்தேன். அரை மணி நேரம் மெய் மறந்து அமர்ந்திருந்தோம். இன்று வரை அந்த நிகழ்வு, என் நினைவில் நிழலாடுகிறது.

இந்த மருத்துவ முகாம் மற்றும் சாது போஜன நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை பெருமையாகக் கருதுகிறேன். இது ஒரு புனிதமான மகான் இருந்த இடம். எவ்வளவோ பேருக்கு அவர் ஆசி வழங்கியிருக்கிறார். அதன் மூலம் பலர் துன்பங்கள், துயரங்களில் இருந்து விடுபட்டு இருக்கின்றனர். அவரது உயரிய சிந்தனைகளை பார்க்கும்போது நெஞ்சம் நெகிழச் செய்கிறது. மருத்துவர்களின் வாழ்க்கையே ஒரு தியாக வாழ்க்கை. தொடர்ந்து பல ஆண்டுகளாக இங்கே வந்து சேவை செய்கின்றனர் என்றால் இந்தச் சேவையிலே ஒரு மகத்துவம் இருக்கிறது. இங்கே செய்கின்ற மருத்துவச் சேவை ஆன்மிகத்தோடு, ஒரு பக்தியோடு செய்கின்ற சேவை. அப்படி செய்கின்ற சேவை, நோயாளிகளுக்கு விரைந்து குணமாக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. இவ்வாறு நீதிபதி கே.என்.பாஷா பேசினார். முடிவில் மாதேவகி, சேவையாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !