இலத்தூர் கோயிலில் 21ம் தேதி சனிப்பெயர்ச்சி வழிபாடு
புளியரை : இலத்தூர் சனிபகவான் ஸ்தலத்தில் வரும் 21ம் தேதி சனிப்பெயர்ச்சி வழிபாடு நடக்கிறது. நெல்லை மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் உள்ள இலத்தூர் கிராமத்தில் அகத்திய மாமுனியால் வணங்கப்பட்டு பிரதிஸ்டை செய்யப்பட்ட மதுநாதர் கோயிலில் வரும் 21ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. திருநள்ளாருக்கு அடுத்து தென் மாவட்டங்களில் சனி பகவானுக்கு என்று தனி கோயில் கொண்டுள்ள இடம் இலத்தூர் சனிபகவான் கோயில் மட்டுமே. அன்றைய தினம் அதிகாலை 4.58 மணிக்கு ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரர் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பிரவேசிக்கிறார். சனி பெயர்ச்சியாவதை முன்னிட்டு முதல் நாள் அதிகாலை கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்குகிறது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், தீபாராதனைகள் நடக்கிறது. 21ம் தேதி அதிகாலை 2 மணியிலிருந்து பூஜை வழிபாடுகள், 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள், கூட்டு அர்ச்சனை நடக்கிறது. இரவு வெள்ளி விக்கிரக சனீஸ்வரர் பக்தி உலா நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை சுசீந்தரம் இணை ஆணையர் ஞானசேகர், செங்கோட்டை கண்காணிப்பாளர், இலத்தூர் கோயில் ஸ்ரீகாரியம் கெங்கமுத்து ஆகியோர் செய்து வருகின்றனர். சனி பெயர்ச்சி அன்று பக்தர்களின் வசதிக்காக இலத்தூர் கோயிலுக்கு சிறப்பு பஸ்கள் அரசு மூலம் இயக்கப்பட உள்ளது.