சபரிமலையில் டோலி கட்டணம்: உயர்த்த தேவஸ்வம் போர்டு முடிவு!
சபரிமலை:மலையேற முடியாத, நடக்க முடியாத பக்தர்களின் வசதிக்காக, பம்பையில் இருந்து சபரிமலைக்கு, அமலில் உள்ள டோலி கட்டணத்தை உயர்த்த, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முடிவு செய்துள்ளது.கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், சபரிமலை ஐயப்பன் கோவிலில், தற்போது மண்டல உற்சவம் நடந்து வருகிறது. இக்கோவிலுக்கு, பம்பை முதல் சபரிமலை சன்னிதானம் வரை, மலையேறித் தான் செல்ல முடியும். இதில், நடக்க முடியாத பக்தர்கள் வசதிக்காக, பம்பையில் இருந்து சன்னிதானம் வரையிலும், தரிசனம் முடிந்து மீண்டும் பம்பை வரையிலும், பக்தர்கள் டோலியை பயன்படுத்தி வருகின்றனர். இச்சேவை, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு கண்காணிப்பில் இருந்து வருகிறது. தற்போது, பம்பையில் இருந்து சன்னிதானம் சென்று, தரிசனம் முடிந்து மீண்டும் பம்பைக்கு திரும்ப கட்டணமாக, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, ஒரு நபருக்கு 1,900 ரூபாய் கட்டணமாக நிர்ணயித்தது. இதுதான், தற்போதைய கட்டணம்.ஆனால், டோலி சுமந்து செல்லும் தொழிலாளர்கள், இக்கட்டணத்திற்குப் பதிலாக, இரண்டு மடங்கு அதிக கட்டணம், அதாவது 3,500 முதல் 4000 ரூபாய் வரை, பக்தர்களிடம் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். இதனால், தினமும் பல பக்தர்கள், டோலி தொழிலாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது வாடிக்கையாகி வருகிறது. இதை தவிர்க்க, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அதிகாரிகளும், டோலி சுமக்கும் தொழிலாளர்கள் சங்கங்களும் பேச்சு வார்த்தை நடத்தியதில், டோலி கட்டணத்தை உயர்த்தத் தீர்மானிக்கப்பட்டது. இதை அடுத்து, டோலிக்கான கட்டணம் 400 ரூபாய் அதிகரிக்கப்படும். இப்புதிய கட்டண உயர்வு, இன்று முதல் அமலுக்கு வரும் என தெரிகிறது. டோலி தொழிலாளர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதங்களை தவிர்க்க, தேவஸ்வம் போர்டு, பம்பையிலும், சன்னிதானத்திலும், பிரீ-பெய்டு கவுன்டர்களை திறக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.