ஹரிவராசனம் பாடலை மறு பதிவு செய்ய திட்டம்
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில், இரவில் நடை சாத்தும் முன் பாடப்படும், ஹரிவராசனம் பாடலை, மறு பதிவு செய்ய, திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள பத்திணம் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது சபரிமலை அய்யப்பன் கோவில். இந்தக் கோவிலில் ஒவ்வொரு நாள் இரவும், நடை சாத்தும் முன், ஹரிவராசனம் என்ற பாடல் பாடப்படும். இந்தப் பாடலை, 1975ல் வெளியான, சுவாமி அய்யப்பன் மலையாள படத்துக்காக, பிரபல கர்நாடக இசைக்கலைஞரும், பின்னணி பாடகருமான, கே.ஜே. யேசுதாஸ் பாடியிருந்தார். அதன்பின், இசையமைப்பாளர், ஜி.தேவராஜன் இசையில், யேசுதாஸ் மீண்டும் பாடி, அந்தப் பாடல் பதிவு செய்யப்பட்டது. அந்தப் பதிவு செய்யப்பட்ட பாடலே தற்போது பயன்படுத்தப்படுகிறது. இதற்கிடையில், ஒரிஜினல் எழுத்து வடிவில் உள்ள பாடலில், ஒவ்வொரு வரியிலும் சுவாமி என்ற வார்த்தையுடன் இந்தப் பாடலை மறு பதிவு செய்யும் முயற்சியை, தேவசம் போர்டு தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற பத்மகுமார் மேற்கொண்டுள்ளார். மேலும், பாடலில், அரி விமர்தனம் என்பது ஒரே வார்த்தையாக பாடப்பட்டுள்ளது. அதைப் பிரித்து பாட வேண்டும். இந்தத் திருத்தங்களுடன், ஹரிவராசனம் பாடலை மீண்டும் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அய்யப்பனின் தீவிர பக்தரான, யேசுதாஸ், அடுத்த மாதம் அமெரிக்காவில் இருந்து திரும்பியதும், அவரது குரலில் மீண்டும் பதிவு செய்யப்பட உள்ளது.