சத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா: திருவிளக்கு வழிபாடு
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், சத்ய சாய்பாபாவின், 92வது பிறந்தநாள் விழாவையொட்டி, திருவிளக்கு வழிபாடு நடந்தது. பொள்ளாச்சி வெங்கடேசா காலனி சாய்மதுரம் கோவிலில், சத்ய சாய்பாபாவின், 92வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. நேற்றுமுன்தினம் காலை, 5:00 மணிக்கு, ஓம்காரம், சுப்ரபாதம் உள்ளிட்ட பூஜைகளுடன் துவங்கியது. தொடர்ந்து, காலை, 6:00 மணிக்கு கொடியேற்றுதல், மதியம், 12:00 மணிக்கு ஆழியாறு பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு சிறப்பு நாராயண சேவை மற்றும் வஸ்திரதானம் வழங்கப்பட்டன. மேலும், உடல் ஆரோக்கியம் பேணுதல், சுற்றுப்புறத்துாய்மை, குழந்தைகள் நலன் பற்றிய சுகாதார விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. மாலை, 5:15 மணிக்கு, 92 பேர் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு சிறப்பு சாய் பஜன் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று, காலை, 5:00 மணிக்கு, சுப்ரபாதம், மாலை, 4:00 மணிக்கு, சிறப்பு ஓமியோபதி மருத்துவ முகாம், மாலை, 6:30 மணிக்கு சிறப்பு சாய் பஜன் நிகழ்ச்சியும் நடக்கின்றன. தொடர்ந்து, 23ம் தேதி வரை காலை, 5:00 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம் உள்ளிட்ட பூஜைகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சத்ய சாய் சேவா சமிதியினர் செய்து வருகின்றனர்.