உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்தசுவாமி கோவிலில் குவிந்துள்ள பிரார்த்தனை புடவைகள் ஏலம்?

கந்தசுவாமி கோவிலில் குவிந்துள்ள பிரார்த்தனை புடவைகள் ஏலம்?

திருப்போரூர் : கந்தசுவாமி கோவிலில், பிரார்த்தனையாக வழங்கப்பட்ட புடவைகள் ஏலம் விடப்படுமா என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். திருப்போரூரில், அறுபடை வீட்டிற்கு நிகராக போற்றப்படும் கந்தசுவாமி கோவில், காஞ்சிபுரம், சென்னை மற்றும் வட மாவட்டத்தினரின், பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. கிருத்திகை, சஷ்டி, விசாகம், திருமண நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில், முருகப் பெருமானை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். குடும்ப நிகழ்ச்சிகளான திருமணம், காதுகுத்தல் போன்றவற்றை, விசேஷமாக நடத்துகின்றனர். வேண்டுதலுக்காக, தங்கத்தேர் இழுக்கின்றனர். அபிஷேக நாட்களில், சுவாமிக்கு விலை உயர்ந்த பட்டு மற்றும் மயில்கண் வேட்டிகளையும், வள்ளி, தெய்வானை அம்மன்களுக்கு புடவைகளையும் வழங்குகின்றனர். நித்ய பூஜை பயன்பாட்டிற்கு போக, மீதமுள்ளவை சேகரிக்கப்பட்டு, கோவில் நிர்வாகத்தினர், ஆண்டிற்கு ஒருமுறை கிருத்திகை நாளில் ஏலம் விடுவர். பக்தர்களும் அவற்றை விரும்பி ஏலம் எடுப்பர். இதன் மூலம், கோவிலுக்கும் லட்சக்கணக்கில் வருவாய் கிடைத்தது. ஆனால், நான்கு ஆண்டுகளாக, சேகரிக்கப்பட்டுள்ள புடவைகள் மற்றும் வேட்டிகள், ஏலம் விடப்படாமல் உள்ளன. இதனால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கோவில் நிர்வாகத்தினர், தடைபட்டுள்ள ஏலத்தை மீண்டும் நடத்த வேண்டும் என, ஆன்மிக அன்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !