உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அயோத்தியில் கோவில் லக்னோவில் மசூதி

அயோத்தியில் கோவில் லக்னோவில் மசூதி

லக்னோ: அயோத்தி பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், அயோத்தியில் ராமர் கோவிலும், லக்னோவில் மசூதியும் கட்டலாம் என, உ.பி., ஷியா வக்பு வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வரைவு திட்டம், உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்கு, அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மதம் மற்றும் நம்பிக்கை தொடர்பான பிரச்னை என்பதால், பேச்சு நடத்தி, சமரசம் ஏற்படுத்த முயற்சிக்கலாம் என, உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.இந்தப் பிரச்னையில், சமரசம் செய்து கொள்வது குறித்து, ஹிந்து அமைப்புகளுடன், உத்தர பிரதேச ஷியா வக்பு வாரியம் பேச்சு நடத்தியது. சமீபத்தில் இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், உ.பி., ஷியா வக்பு வாரியத் தலைவர், வாசிம் ரிஸ்வி கூறியதாவது:அயோத்தி பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சமரசம் செய்ய முன் வந்துள்ளோம். அதன்படி, அயோத்தியில் உள்ள நிலத்தை ஹிந்துக்களுக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு ராமர் கோவில் கட்டலாம். அதே நேரத்தில், லக்னோவின் ஹுசைனாபாத் பகுதியில், மசூதி அமைக்க வேண்டும். இதற்கு மாநில அரசு, ஒரு ஏக்கர் நிலத்தை அளிக்க வேண்டும். இந்த சமரசம் தொடர்பான வரைவு அறிக்கையை, நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !