ஊட்டி கிராமத்தில் "ஒச அண படுகரின பண்டிகை - திரளான மக்கள் பங்கேற்பு
ஊட்டி : பாலகொலா கிராமத்தில் நடந்த ஒச அண, சூஞ்சு பண்டிகையில் திரளான படுகரின மக்கள் பங்கேற்றனர்.
பாலகொலா ஊரில் அமைந்துள்ள மேற்கு நாட்டிற்கு பொதுவான இடமான பெந்தோரணை யில், மேற்கு நாட்டில் மட்டும் நடைபெறும் படுகரின மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஒச அண மற்றும் சூஞ்சு பண்டிகை ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த, 300 ஆண்டுகளுக்கு முன், கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தில் அரசின் பிரதிநிதி யாக தாராபுரத்தை தலைமையிடமாக வைத்து, நீலகிரியிலும் கப்பம் (வரி) வசூலித்து வந்தனர். வரி வசூலிக்க அப்போது, 19 ஊர் தலைவராக இருந்த பாலசெவனன் என்பவருக்கு மணியகாரர் பட்டம் கொடுத்து வரி வசூலிக்கும் அனுமதி வழங்கப்பட்டது. மணியகாரருக்கு அடையாள சின்னமாக ஒரு வெள்ளி முத்திரை வழங்கப்பட்டது.
மேலூர், கிராமத்தில், 33 ஊர்களுக்கு பொதுவாக ஒரு சிவன் கோவில் அமைத்து, அங்கு
பூசை செய்ய ஒரு ஆறுவ பூஜாரியை நியமித்தும், மேற்படி மணியகாரருக்கு கோவில்
பூஜைகளுக்கு உதவியாக ஒரு சின்ன கணிகை கவுடரை, மணியகாரர் நியமித்து அவருக்கு அடையாள சின்னமாக, 3 தங்க குண்டுமணிகள், தனிப்பட்ட குத்தணை சீலையையும் வழங்குவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், பாலகொலா கிராமத்தில் ஆண்டு தோறும் நடக்கும் ஒச அண பண்டிகையில், 300 ஆண்டுகள் பழமையான வெள்ளிக்காசு வைத்து பூஜை செய்யப்படுகிறது. அதிலுள்ள பையில் அந்த குண்டு மணிகளையும் வைத்து பூஜிக்கப்படுகிறது.
கோவில் விழா காலங்களில் தற்போதுள்ள மணியகாரர், சின்னகணிகை கவுடர், ஆறுவ
பூஜாரி என, மூவரும் பூஜையை நடத்தி வைக்கின்றனர். ஆண்டுதோறும் படுகரின மக்களின் முதல் மாதமான "தை மாதத்தில் பாலகொலா கிராமத்தில் உள்ள பெந்தோரணையில் இதற்கான சிறப்பு பூஜை நடத்தப்படுவது வழக்கம், அதன்படி நடப்பாண்டுக்கான பூஜை பாலகொலா கிராமத்தில் நடந்தது. அதன்படி, மணி யகாரரிடம் இருந்த வெள்ளி முத்திரை, சின்னகணிகை கவுடர் வைத்துள்ள குண்டு மணிகள் ஆகியவை மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன. இவர்களுடன் ஆறுவ பூஜாரியும் ஒன்றாக அமர்ந்து அடையாள பொருள்களை வணங்கி காணிக்கை செலுத்தினர். இந்த காணிக்கை பூமிக்கு செலுத்தும் இந்தாண்டுக்கான வரியாகும்.
கிராம மக்கள் கூறுகையில்,ஆங்கிலேயர் காலம் தொட்டு நடக்கும் நடைமுறைகளை
மறக்காமல், ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதால், நிலங்களுக்கு வரி
வழங்குவதை நாம் முறையாக பின்பற்றவேண்டும் என்ற விழிப்புணர்வும் ஏற்படுகிறது
என்றனர்.