வெங்கம்பூர் வரதராஜ பெருமாள் கோவிலில் 24ல் கும்பாபிஷேகம்
வெங்கம்பூர்: கொடுமுடி தாலுகா, வெங்கம்பூரில் ரயில்வே கேட் அருகில், காவிரி
ஆற்றின் மேற்பகுதியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள், சிவகாமி சமேத
சோழீஸ்வர சுவாமி கோவில்கள் ஒருங்கிணைந்து, வரதராஜ பெருமாள் வகையறா கோவில் உள்ளது. கோவில் திருப்பணி, உபயதாரர்களால் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேக விழா, 24ல் நடக்கிறது. முன்னதாக, நேற்றிரவு கிராம சாந்தி வழிபாடு தொடங்கியது. இன்று காலை, கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு மேல் காவிரி ஆற்றில் இருந்து
தீர்த்தம் கொண்டு வருதல், மாலை, 4:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜை நடக்கிறது. நாளை இரண்டாம் கால யாக பூஜை, பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தனம் சாற்றுதல், மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. நவ.,24ல் அதிகாலை நான்காம் கால யாக பூஜை, அதை தொடர்ந்து காலை, 7:50 முதல், 9:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. பாண்டமங்கலம் ராம்குமார் சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர், கும்பாபிஷேக விழாவை நடத்துகின்றனர்.