சீனிவாச பெருமாள் கோவிலில் அம்மன் தாலி திருட்டு
மங்கலம்பேட்டை: விருத்தாசலம் அருகே 3 லட்சம் மதிப்பிலான அம்மன் தாலி, உண்டியல்களில் காணிக்கையை மர்ம நபர்கள் திருடிச் சென்றதால், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த ரெட்டிக்குப்பத்தில், ஸ்ரீதேவி பூதேவி உடனுறை சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் பூஜை செய்து வருகிறார். நேற்று இரவு பூஜை முடிந்து, கோவிலை பூட்டிவிட்டுச் சென்றார்.
வழக்கம்போல், அதிகாலை 5:00 மணியளவில், கோவிலை திறக்கச் சென்ற போது, கோவில் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன. உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியலை காணவில்லை. அதுபோல், அம்பாள் கழுத்தில் இருந்த 4 சவரன் தாலிச்செயினும் திருடுபோயிருந்தது. தகவலறிந்து வந்த மங்கலம்பேட்டை போலீசார் விசாரித்ததில், உண்டியலை துாக்கிச் சென்ற மர்ம நபர்கள், அதிலிருந்த காணிக்கை எடுத்துக் கொண்டு, அருகில் உள்ள குளக்கரையில் உண்டியலை வீசிச் சென்றது தெரிந்தது. மோப்ப நாய் புருனோ உதவியுடன், மர்ம நபர்களின் கைரேகைகளை போலீசார் சேகரித்தனர். இது குறித்து மங்கலம்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம்: இதேபோல், விருத்தாசலம் அடுத்த பரவளூர் ஆலயம்மன், அண்ணா நகர் மாரியம்மன் கோவில்களிலும் முன்புற கதவுகளில் இருந்த பூட்டுகளை உடைத்து, அங்கிருந்த உண்டியல்களை உடைத்து, காணிக்கையை திருடிச் சென்றுள்ளனர். விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அம்மன் தாலி திருட்டு, உண்டியல்களை உடைத்து காணிக்கையை திருடிச் சென்ற சம்பவத்தால், கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.