கைலாசநாதர் கோவிலில் குவியும் வெளிநாட்டினர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலுக்கு வரும், வெளிநாட்டு சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாமல்லபுரம் கடற்கரை கோவில், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், திருக்கழுக்குன்றம் குடவறை மண்டபம், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் ஆகியவை, வெளிநாட்டு பயணியர் வந்து செல்லும், சுற்றுலா தலங்களாக விளங்குகின்றன. இதில், கலைநயமிக்க கற்சிற்பங்கள் நிறைந்த, காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், முதலாம் நரசிம்ம வர்மன் என்ற ராஜசிம்ம பல்லவனால், கி.பி., 700 - 728ல் கட்டப்பட்டது. காஞ்சிக்கு வரும் வெளிநாட்டு பயணியர், விரும்பி செல்லும் இடமாக இக்கோவில் உள்ளது. சுற்றுலா கைடு இங்கு இல்லை. கோவில் வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில், தொல்லியல் துறை சார்பில் வைக்கப்பட்ட தகவல் பலகையில், எழுத்துகள் மங்கிய நிலையில் உள்ளன. எனவே, புதிய தகவல் பலகை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.