வெங்கடேச பெருமாள் கோவில் விழா:கோவிந்தா கோஷம் எழுப்பி பரவசம்
உடுமலை;உடுமலை திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோவிலில் நடந்த நிலவு வைத்தல் விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.உடுமலை பள்ளபாளையம் செங்குளம் அருகே, லேக் வியூ அவென்யுவில், உடுமலை திருப்பதி எனப்படும் வெங்கடேசப் பெருமாள் கோவில் திருப்பணிகள் நடந்து வருகின்றன.
கற்கோவில், கருவறை பிரதமவரி சித்ரவானம் துவக்க விழாவையடுத்து, நேற்று, காலை, 9:00 மணிக்கு, வெங்கடேசப் பெருமாள் சன்னதிக்கு நிலவு வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜனசங்க மாநிலத் தலைவர் கெங்குசாமி தலைமை வகித்தார். ஸ்ரீவில்லிபுத்துார் பீடாதிபதி கடகோப ராமாநுஜ ஜீயர் சுவாமிகள் முன்னிலை வகித்தார்.இதையடுத்து, ஸ்ரீ தாயார், ஸ்ரீ ஆண்டாள் சன்னதிகளுக்கு பிரதமவரி துவக்கம், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ தன்வந்திரி சன்னதிகளுக்கு கோணவட்ட, சதுரவட்ட மூடுகல் அமைத்தல், ஸ்ரீ விஸ்வக்சேனர், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ ஹயக்கிரீவர் சன்னதிகளுக்கு நிலவு வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. தொடர்ந்து, ஜோதிடர் ராஜகோபாலன் மற்றும் அனந்த பத்மநாபாச்சாரியார் ஆகியோர் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினர்.விழாவில், ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்ட நிலையில், கோவிந்தா கோஷம் எழுப்பி, பரவசம் அடைந்தனர்.விழாவில், உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் சரவணா மில்ஸ் ராமகிருஷ்ணன், ஜி.வி.ஜி., குழுமம் அமர்நாத்மற்றும் வேலுச்சாமி, வெங்கடேஷா குழுமம் ரவீந்திரன் ஆகியோர்உட்பட திருப்பணிக் குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.