ஆதி மகாலட்சுமி கோவில் கும்பாபிஷேகம்
குன்னுார்:குன்னுார் அருகே எடப்பள்ளி சித்தகிரி ஷீரடி சாய்பாபா கோவிலில் கணபதி, சுப்ரமணியர், ஐயப்பன், ஆதி மகாலட்சுமி, தத்தாத்ரேயர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.குன்னுார் அருகே எடப்பள்ளி சித்தகிரி ஷீரடி சாய்பாபா தர்மசாலா வளாகத்தில் கணபதி, சுப்ரமணியர், ஐயப்பன், ஆதி மகாலட்சுமி, தத்தாத்ரேயர் கோவில்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டன. கோவில்களின் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக, 21ம் தேதி குருவந்தனம், தேவதா அனுக்ஞை, மகா கணபதி ஹோமம், ஆகியவை நடந்தன. 22ம் தேதி வேதபாராயணம், துவார பூஜை, மண்டல பூஜை, வேதிகா அர்ச்சனை, ஆவரண அர்ச்சனை, தத்துவ அர்ச்சனை, பூர்ணாகுதி, ஆகியவை நடந்தன. நேற்று காலை, 8:30 மணிக்கு வேதபாராயணம், மண்டல பூஜை, வேதிகா அர்ச்சனை, நான்காம் கால மூலமந்திர ஹோமம், யாத்ரா தான சங்கல்பம் ஆகியவை நடந்தன. தொடர்ந்து, ஆதி மகாலட்சுமி, தத்தாத்ரேயர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தச தரிசனம், சிறப்பு தீபாராதனை நடந்தது. அய்யர்மலை வித்யா மகா சபுவாக்கிய பாரம்பிகா பீடாதிபதி பிரணவானந்த் சரஸ்வதி சுவாமிகள் தலைமை வகித்தார். இதற்கான ஏற்பாடுகளை சித்தகிரி ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை தலைவர் மாதா சக்திமயி, செயலாளர் நந்தீஷ்வரானந்த சரஸ்வதி சுவாமி மற்றும் அறங்காவலர்கள், பக்தர்கள் மேற்கொண்டனர்.