உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவபாஷாணத்தின் அவலம்: தோஷம் கழிக்க முடியாத பக்தர்கள்!

நவபாஷாணத்தின் அவலம்: தோஷம் கழிக்க முடியாத பக்தர்கள்!

ராமநாதபுரம் : தேவிபட்டினம் நவபாஷாணத்தின் நடைமேடை "டைல்ஸ்கள் பெயர்ந்து, தண்ணீர் தேங்கி சாக்கடையாக உள்ளதால், பக்தர்கள் முழுமையாக தோஷம் கழிக்க முடியாமல் வேதனையுடன் ஊர் திரும்புகின்றனர். தேவிபட்டினம் நவபாஷாணம், ராமபிரான் தன் தோஷம் நீங்குவதற்காக ஒன்பது கிரகங்களை கையால் செய்து, பூஜை செய்த தலம். 1700 ஆண்டுகள் பழமையானது. எத்தனையோ நவக்கிரக தலங்கள் இருந்தாலும், கடலுக்குள் இருக்கும் இந்த நவக்கிரகத்தை வழிபட்டால், தீராத தோஷங்களும் தீரும் என்பது நம்பிக்கை. இதனால் தமிழகம் மட்டுமன்றி, அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும்ம் ஏராளமான பக்தர்கள் தேவிபட்டினம் வந்து செல்கின்றனர். நவக்கிரகங்களை வழிபட, கடலுக்கு மேல் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. நவக்கிரகங்களை சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கம்பிகள், துருப்பிடித்து, உடைந்து காணப்படுகின்றன. இதை பிடிப்பவர்களின் கையில் ரத்தம் பார்க்காமல் செல்வதில்லை. நடைமேடையின் "டைல்ஸ்கள் பெயர்ந்து, நடப்பவர்களின் பாதங்களை பதம்பார்த்து வருகின்றன. டைல்ஸ்கள் பெயர்ந்துள்ளதால் மழைநீருடன் கடல் நீர் தேங்கி சாக்கடையாக மாறி உள்ளது. நவக்கிரகத்தை மேடையை சுற்றி வரவேண்டியவர்கள், அந்த கழிவுகளில் கால் வைக்க முடியாமல், வந்த வழியே செல்கின்றனர். இதனால் முழுமையாக தோஷம் கழிக்க முடியாமல் வேதனையுடன் திரும்ப வேண்டி உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம், தேவிபட்டினம் நவபாஷான நடைமேடையை சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !