அய்யப்பன் கோவிலில் நுழையக் கூடாது: தேவஸ்வம் போர்டு தடை!
சபரிமலை : சபரிமலை அய்யப்பன் கோவில் தந்திரி கண்டரரு மகேஸ்வருவின் பேரன் ராகுல் ஈஸ்வர் , மூலவர் சன்னதியில் நுழைய முயன்ற போது அவரை, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டம் சபரிமலையில் பிரசித்திப் பெற்ற அய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல உற்சவம் நடந்து வருகிறது. இதில், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்து வருகின்றனர். கோவிலின் தந்திரியாக கண்டரரு மகேஸ்வரரு இருந்து வருகிறார். இவரது பேரன் ராகுல் ஈஸ்வர். இவர் நேற்று மதியம் கோவிலுக்கு வந்தார். சன்னதியில் உச்சிக்கால பூஜை முடிந்த பிறகு, சன்னதிக்குள் நுழைய முயன்றார். அதற்குள் அவரை திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, அத்து மீறி உள்ளே செல்ல அனுமதியில்லை என்றனர். இதை அடுத்து அவருக்கும் அதிகாரிகளுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இது குறித்து தந்திரி கண்டரரு மகேஸ்வரரு கூறுகையில், "எனது பேரன் ராகுல் ஈஸ்வர் கோவிலுக்குள் சென்று பூஜை, புனஸ்காரங்களை செய்வதற்கு அதிகாரமும், உரிமையும் உள்ளது. கோவிலுக்குள் யார் பூஜை செய்ய வேண்டும் என்பது குறித்து தந்திரியான நான் தான் முடிவு செய்ய வேண்டும். வேறு யாருமல்ல என்றார். ஆனால், இது குறித்து கோவில் செயல் அலுவலர் சதீஷ்குமார் கூறுகையில், "ராகுல் ஈஸ்வர் கோவிலுக்குள் அத்துமீறி நுழைய முயன்றார். அவரை நாங்கள் தடுத்து நிறுத்தினோம். அவர் கோவிலுக்குள் நுழைய உரிமையில்லை. அவ்வாறு அவர் மீண்டும் நுழைய முயன்றால் தடுப்போம் என்றார். இதுகுறித்து ராகுல் ஈஸ்வர் கூறுகையில், "கோவிலுக்குள் நான் அத்து மீறி நுழையவில்லை. சன்னதிக்குள் பூஜை, புனஸ்காரங்களை யார் செய்ய வேண்டும் என்பதில் இறுதி முடிவெடுக்க வேண்டியது தந்திரி தான் என்றார். இச்சம்பவம் கோவிலில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.