புல்மேடு பாதையில் தற்காலிக டவர்: பி.எஸ்.என்.எல்., முடிவு
சபரிமலை: மகரவிளக்கு காலத்தில் புல்மேடு பாதையில் ஜெனரேட்டர் உதவியுடன் தற்காலிக அலைபேசி டவர் நிறுவ பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். இது குறித்து சப்.டிவிஷன் இஞ்ஜினியர் ஜெயராஜ் கூறியதாவது: சபரிமலை, பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் பி.எஸ்.என்.எல். எக்சேஞ்ச் உள்ளது. இதன் வழியாக தரை வழி இணைப்புகள் வழங்கப்படுகிறது. சன்னிதானத்தில் 285 தரைவழி இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. மீடியாக் களுக்காக 13 கண்ணாடிஇழை லீஸ் லைன்கள் தயார் நிலையில் உள்ளது. பம்பை மற்றும் சன்னிதானத்தில் செயல்படும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்காக 12890 என்ற இலவச அழைப்பு எண், ஒரே நேரத்தில் 10 பேர் தொடர்பு கொள்ளும் வசதி உள்ளது. பக்தர்களுக்கு பயன்படும் வரையில் 86 ரூபாய்க்கான ரீசார்ஜ் வசதி உள்ளது. இதில் 5 நாட்கள் அனைத்து அழைப்புகள் மற்றும் அளவில்லா டேட்டா கிடைக்கும். ஆயுர்வேத மருத்துவமனை அருகே டெலிகாம் சென்டரில் பிரவுசிங், பணம் செலுத்துதல், பொது அழைப்பு மையம் போன்ற வசதிகள் உள்ளது. மகரவிளக்கு காலத்தில் புல்மேடு பாதையில் அதிக அளவு பக்தர்கள் வருவார்கள் என்பதால் இங்கு ஜெனரேட்டரில் இயங்கும் தற்காலிக அலைபேசி டவர் நிறுவப்படும். சன்னிதானத்தில் 12 இடங்களில் 3ஜி டவர்கள் உள்ளது. கூட்டம் அதிகமானலும் நெருக்கடி ஏற்படாமல் பேசமுடியும்.இவ்வாறு அவர் கூறினார்.