பழநியில் காவடிகளுடன் குவிந்த கேரள பக்தர்கள்
பழநி: கார்த்திகைத்தீபத் திருவிழாவை முன்னிட்டு பழநிகோயிலில் குவிந்த பக்தர்கள் ஐந்து மணிநேரம் காத்திருந்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர். பழநி மலைக்கோயிலில் கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் மலைக்கோயிலில் குவியத்தொடங்கினர். திருஆவினன்குடிகோயில், பாதவிநாயகர் கோயில், நான்குகிரிவீதி கோயில்களிலும் பக்தர்கள் காவடிகள், பால்குடங்கள் எடுத்துவந்தனர். பின்பு கார்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுசெய்தனர். கேரளாவைச் சேர்ந்த நுாற்றுக்குமேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.
நீண்ட நேரம் காத்திருப்பு: மழை காரணமாக அடிக்கடி ரோப்கார் இயங்காததால் வின்ச் ஸ்டேஷனில் மட்டும் பக்தர்கள் 3 மணி மணிநேரம் வரை காத்திருந்து, மலைக் கோயிலுக்கு சென்றனர். காலையில் சென்ற பக்தர்கள் அன்னதானத்தில் பங்கேற்று மாலையில் கார்த்திகைத் தீபம் ஏற்றுவதை பார்ப்பதற்காக மலையில் தங்கிவிட்டதால், மலைக்கோயில் வெளிப்பிரகாரம் முழுவதும் பக்தர்கள் நிரம்பியிருந்தனர். 7 மணிக்குமேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் மாலை 4 மணிக்குமேல் படிப்பாதை மூடப்பட்டது. இரவு 7 மணிக்கு திறக்கப்பட்டது. பொது தரிசன வழியில் 5மணி நேரம் வரை காத்திருந்து மூலவர் ஞான தண்டாயுதபாணியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.