காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், கடை ஞாயிறு விழா
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், மூன்றாவது வார, கடை ஞாயிறு விழாவான நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, மாவிளக்கு தீபமேற்றி, சுவாமியை வழிபட்டனர். காஞ்சிபுரத்தில் பழமையான, சிவாலயங்களில் ஒன்றாக கச்சபேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில், ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில், வாரந்தோறும் ஞாயிற்று கிழமைகளில், கடை ஞாயிறு விழா நடைபெறும். நடப்பு ஆண்டு விழா, கடந்த மாதம், 19ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, ஐந்து ஞாயிற்றுக்கிழமைகள் நடைபெறும். காதில் சீழ் வடிதல், தலைவலி, காது வலி என, தலை சம்பந்தப்பட்ட நோய்கள் தீர, நேர்த்தி கடனாக புது மண்சட்டியில், பச்சரிசி மாவு, வெல்லம் சேர்த்து, அதில் அகல் விளக்கில் நெய்தீபம் ஏற்றி, தலையில் சுமந்தபடி கோவிலை சுற்றி வருவர். மூன்றாவது வார, ஞாயிற்றுக்கிழமையான நேற்று, மாவிளக்கு எடுத்த குழந்தைகள், சிறுவர், சிறுமியர், பெரியோர் என, ஆயிரக்கணக்கான பக்தர்கள், விநாயகர் சன்னதியில், தேங்காய் உடைத்து, வழிபட்டனர். கூட்டம் அதிகமாக இருந்ததால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.