15 ஆண்டிற்குப்பின்.. வங்கி லாக்கரில் இருந்த முருகன் தங்கக் கவசம் மீட்பு
போடி: போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகனுக்கு அணிவிக்க வேண்டிய தங்க, வெள்ளி கவசங்களை ௧௫ ஆண்டுகளுக்கு பின், வங்கி லாக்கரில் இருந்து அறநிலையத்துறையினர் மீட்டனர்.
தேனிமாவட்டம் போடியில் அறநிலையத் துறைக்கு சொந்தமான சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. ௧௫ ஆண்டுகளுக்கு முன் மக்களிடம் நன்கொடையாக வசூல் செய்யப்பட்ட பணம் மூலம் சுவாமிக்கு தங்கம் மற்றும் வெள்ளிக் கவசம் வாங்கப்பட்டது. இவை பரம்பரை அறங்காவலராக இருந்த ஜமின்தார் வடமலை முத்து சீல ராஜைய பாண்டியரிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்பின் கோயில் தக்காரிடம் பொறுப்புகள் ஒப்படைக்கும் போது, தங்க, வெள்ளிக் கவசங்கள் உள்ளிட்ட பொருட்களை ஒப்படைக்கப்படவில்லை. இதனால் கோயில் விஷேச நாட்களில் சுவாமிக்கு தங்கக் கவசம் அணிவிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் அதனை போடியில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா லாக்கரில் வைக்கப்பட்டுள்ளதாகவும், வாடகை செலுத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது. தக்கார் வசம் கவசங்களை ஒப்படைக்குமாறு போடி சிங்காரவேலன் பழநி பாதயாத்திரை பேரவை குருசாமி சுருளிவேல், அறநிலையத்துறை உதவி ஆணையர், தேனி மாவட்ட கலெக்டரிடமும் புகார் செய்தார். இதன் அடிப்படையில் விசாரணை நடந்தது. மதுரை அறநிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பன், திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம், தேனி மாவட்ட கோயில் ஆய்வாளர் அய்யம்பெருமாள், கோயில் தக்கார் கிருஷ்ணவேணி, வி.ஏ.ஓ., அன்பழகன் ஆகியோர் நேற்று வங்கி லாக்கரில் இருந்த தங்கக் கவசம், வெள்ளி கவசம் உள்ளிட்ட பொருட்களை, பரம்பரை அறங்காவலர் முத்துவீர சுருளியம்மாள் முன்னிலையில் மீட்டனர்.
அறநிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பன் கூறுகையில்: முன்னாள் பரம்பரை அறங்காவலர் ஒப்படைக்கப்படாத தங்க, வெள்ளி கவசம் உள்ளிட்ட பொருட்கள் வங்கி லாக்கரில் இருந்து மீட்கப்பட்டது. இதில் முருகனுக்கு அணிவிக்க கூடிய இரண்டேகால் அடி உயரம், 1,970 கிராம் எடையுள்ள தங்க கவசம் மற்றும் வெள்ளி கவசங்களும் வைக்கப்பட்டிருந்தன. மேல் விசாரணை நடக்கிறது. விசேஷ நாட்களில் கவசங்கள் சுவாமிக்கு அணிவிக்கப்படும், என்றார்.