ஐயப்ப பக்தர்களுக்கு ஓய்வு மையம் திறப்பு சுக்குமல்லி காபி, குடிநீர் வழங்க ஏற்பாடு
கூடலுார் : குமுளியில் ஐயப்ப பக்தர்கள் தங்கி ஓய்வெடுத்து செல்லும் வகையில், போலீசாரால் ஓய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக கேரள எல்லையில் உள்ள குமுளி வழியாக, ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் சபரிமலைக்கு சென்று திரும்புகின்றனர். இரு மாநில எல்லையை இணைக்கும் பகுதியான குமுளியில் உள்ள தமிழக பஸ் ஸ்டாண்ட் பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. சபரிமலைக்கு தமிழகப் பகுதியில் இருந்து கூடுதலான ஐயப்ப பக்தர்கள் செல்கின்றனர். இவர்களுக்காக தமிழகப் பகுதியில் ஓய்வெடுப்பதற்கும், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லாததால் சிரமம் அடைந்தனர். இந்நிலையில், அருகில் உள்ள கேரள மாநிலம் குமுளி காவல் நிலையம் சார்பில், ஐயப்ப பக்தர்களுக்கான ஓய்வெடுக்கும் மையத்தை, கட்டப்பனை டி.எஸ்.பி., ராஜ்மோகன் துவக்கி வைத்தார். நடந்து வரும் ஐயப்ப பக்தர்களும், தரிசனம் முடிந்து திரும்பும் பக்தர்களும் இந்த மையத்தில் 24 மணி நேரமும் தங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு குடிநீர், சுக்குமல்லி காப்பி பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது என கேரள போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.