திட்டக்குடி பக்த ஆஞ்சனேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி
திட்டக்குடி: திட்டக்குடி பக்த ஆஞ்சனேயர் கோவிலில் நேற்று காலை நடந்த அனுமன்ஜெயந்தி விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திட்டக்குடி பக்த ஆஞ்சனேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி நேற்று அதிகாலை 4.30மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. 5மணிக்கு திருப்பாவை பாடியும், 6மணிக்கு சிறப்பு தீபார்த்தைனையும் நடந்தது. தொடர்ந்து கோவில் பட்டாச்சாரியார் பாலாஜி வரதாச்சாரியார் தலைமையில் ஆயிரத்தெட்டு சகஸ்ர நாமாவளி அர்ச்சனையுடன், ஆஞ்சனேயருக்கு வெள்ளிக்கவச அலங்காரம், வெண்ணெய் அலங்காரம், வடைமாலை சாத்துதல் நடந்தது. ஆஞ்சனேய பக்தர்கள் குழுவினர் ஸ்ரீராம கீர்த்தனம் வாசித்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராஜேந்திரன் செய்திருந்தார். சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர். கோவில் நிர்வாகம் சார்பில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.