உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா

ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா

திருத்தணி: அனுமன் ஜெயந்தியை ஒட்டி, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நேற்று நடந்தன. திருத்தணி அடுத்த, நல்லாட்டூர் கிராமத்தில் உள்ள, வீரமங்கள ஆஞ்சநேயர் கோவிலில், மார்கழி மாத அமாவாசை மற்றும் மூலநட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் பிறந்த நாளை, அனுமன் ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது.

தீபாராதனை: அவ்வகையில் நேற்று, அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. இதில், மூலவர் ஆஞ்சநேயருக்கு வடைமாலை, வெற்றிலை மாலை, துளசி, செந்துாரம், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு காப்புகள் அணிவிக்கப்பட்டன. பின், சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தன. மாலையில், ஆன்மிக சொற்பொழிவும், இரவு உற்சவர் வீதியுலாவும் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஆஞ்சநேய பெருமானை வழி பட்டனர். இதே போல், கே.ஜி.கண்டிகையில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தியை ஒட்டி, மூலவருக்கு பால், பன்னீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, கோவில் வளாகத்தில் உள்ள, 35 அடி உயரமுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு, வடைமாலை அணிவித்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அதே போல், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், ஆஞ்சநேயர் கோவில்கள் மற்றும் தனி சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தன.

வீர ஆஞ்சநேயர்: காக்களூர் வீர ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு நேற்று, அருள்பாலித்தார். திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள, வீர ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி உற்சவம், நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, காலையில்; மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. பின், மூலவருக்கு, மலர்களால் சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, ஆஞ்சநேயருக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில், திருவள்ளூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

நகரி: நகரி டவுன் நகராட்சி அலுவலகம் அருகில் பிரசன்ன வீரஆஞ்சநேயர், கீழப்பட்டு புறவழிச் சாலை வீரஆஞ்சநேயர், நகரி பெருமாள் கோவில் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதி ஆகிய கோவில்களில், அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. - நமது நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !