20ம் ஆண்டு லட்சார்ச்சனை; திருவிளக்கு வீதி உலா
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தாரின் லட்சார்ச்சனை விழாவையொட்டி, திருவிளக்கு வீதி உலா நடந்தது.
குமாரபாளையம், நாராயண நகர், அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில், 20ம் ஆண்டு சிறப்பு லட்சார்ச்சனை, புஷ்பாஞ்சலி, அன்னதானம் ஆகியவை, வரும், 23ல், அம்மன் நகர் ஐயப்பன் கோவிலில் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, நேற்று மாலை, ஐயப்ப சுவாமி திரு ஆபரண பெட்டி, கற்பூர ஆழியுடன், ஏராளமான பெண்கள் பங்கேற்ற, திருவிளக்கு வீதி உலா துவங்கியது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் கணபதி, ஐயப்பன், முருகன் சுவாமிகள் அருள்பாலித்தவாறு வர, அம்மன் நகர் ஐயப்பன் கோவிலில் நிறைவு பெற்றது. 62 ஆண்டுகள், 955 முறை சபரிமலை யாத்திரை முடித்த பெருங்கோட்டுகாவு, இளவஞ்சேரி பங்கஜாஸ் குருசாமி சாரட் வாகனத்தில் வலம் வந்தார். திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., பாஸ்கரன், நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, நகர, அ.தி.மு.க., செயலாளர் நாகராஜன் உள்பட பலர் தலைமை வகித்தனர். பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, சங்க செயலாளர் ஜெகதீஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தனர்.