வேதபிரான் திருமாளிகையில் பச்சை பரத்தல் : ரெங்கமன்னாருடன் பார்த்த ஆண்டாள்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் பகல்பத்து உற்ஸவத்தை முன்னிட்டு, வேதபிரான் திருமாளிகையில் பச்சை பரத்தலை ஆண்டாள், ரெங்கமன்னார் பார்வையிட்டனர்.
ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடக்கும் பகல்பத்து உற்ஸவத்தை முன்னிட்டு, தான் அவதரித்த வேதபிரான் திருமாளிகைக்கு ரெங்கமன்னாருடன் ஆண்டாள் எழுந்தருள்வார். அங்கு பச்சைக்காய்கறிகள் கொண்ட பச்சை பரத்தலை காண்பது வழக்கம்.இதற்காக நேற்று மாலை 4:35 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வேதபிரான் திருமாளிகைக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர். அவர்களை வேதபிரான் பட்டர் வரவேற்றார்.அங்கு சிவகாசி கட்டளைபட்டி கிராமத்தினர் கொண்டுவந்த பச்சை காய்கறிகளை ஆண்டாள், ரெங்கமன்னார் பார்வையிட்டனர். அங்கு சதீஷ்பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார். நைவேத்யமாக திரட்டுபால், மணிப்பருப்பு வழங்கப்பட்டது.அங்கிருந்து கோபாலவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு கோஷ்டி, தீர்த்தம் வழங்குதல், பக்தர்களுக்கு சடாரி ஆசீர்வாதம் வழங்குதல் நடந்தது. தொடர்ந்து பெரியபெருமாள் கருடவாகனத்திலும், பெரியாழ்வார் யானை வாகனத்திலும் எழுந்தருள, ஆண்டாள் சன்னிதி கல்யாண மண்டபத்தில் திருப்பல்லாண்டு துவங்கியது. பகல்பத்து மண்டபத்தில் திருத்திரை வாங்குதல், திருவாராதனம், கோஷ்டி அருளிப்பாடு, திருப்பல்லாண்டு, பெரிய பெருமாள் பக்தி உலாவுதல் நடந்தது. இரவு 2:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் மூலஸ்தானம் வந்தனர். இதையடுத்து டிச.,28 வரை தினமும் கோபாலவிலாசத்தில் பகல்பத்து உற்ஸவங்கள் நடக்கும்.வேதபிரான் அனந்தராமன், சுதர்சனன், தக்கார் ரவிச்சந்திரன், செயல்அலுவலர் நாகராஜன் பங்கேற்றனர்.