தெரியாமல் சொன்னாலும்..
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் காஞ்சி பெரியவர் முகாமிட்ட போது, சில பக்தர்கள் சந்திக்க வந்தனர். இங்கே வேதம் கற்ற சமஸ்கிருத பண்டிதர்கள் யாருமில்லை. பொருள் தெரியாமல், மந்திரத்தை ஒப்பிக்கிற சாஸ்திரி ஒருவர் இருக்கிறார். அவர் சொல்லும் மந்திரங்களின் பொருள் என்னவென்று எங்களுக்கு தெரியாது. சடங்குகளை மந்திர சாஸ்திர விதிமுறைப்படி சிரத்தையாக செய்ய நாங்கள் விரும்புகிறோம். சமஸ்கிருத ஞானம் மிக்க பண்டிதர் ஒருவரை தாங்கள் அனுப்ப வேண்டும், என கேட்டனர். அப்போது அன்றைக்கு வந்த தபால்களை மடத்து ஊழியர் சுவாமியிடம் கொடுத்தார். உறைகளின் மேல் முகவரியும், கீழே பி.ஐ.என் என போட்டு பின்கோடு நம்பர் எழுதப்பட்டிருந்தது. சுவாமி சிரித்தவாறே வந்தவர்களிடம், இந்த உறைகளின் மீது பிஐஎன் என்று இருக்கிறதே? என்னவென்று தெரியுமா?
எல்லோரும் திகைத்தனர். யாருக்கும் பிஐஎன் என்பதன் விரிவாக்கம் தெரியவில்லை. சுவாமி தொடர்ந்து பேசினார். பிஐஎன் என்றால் போஸ்டல் இன்டெக்ஸ் நம்பர். அதன் சுருக்கம் தான் பின்கோடு. ஆனால் இந்த விளக்கம், தபால்களை கொடுத்த ஊழியருக்கு தெரியாது. அஞ்சல் அலுவலருக்கே கூட தெரியாமல் இருக்கலாம். நமக்கு தபால் அனுப்பியவருக்கும் பின்கோடு எண் தான் தெரிந்திருக்குமே தவிர, அதன் விளக்கம் தெரியாதிருக்கலாம். விளக்கம் தெரியாமல் எழுதினாலும், அது உரிய ஊரிலுள்ள நபருக்கு போய் சேர்கிறது இல்லையா? அது மாதிரி தான் மந்திரமும். உங்கள் ஊர் சாஸ்திரிகளுக்கு அதன் பொருள் தெரிந்தால் நல்லது. ஆனால் கட்டாயம் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களுக்கும் கூட தெரிய வேண்டும் என்ற கட்டாயமில்லை. தெரிந்து சொன்னாலும், தெரியாமல் சொன்னாலும், அதற்கான பலன் கிடைக்கும். சாஸ்திரிகளை யாரும் குறைத்து பேச வேண்டாம். குருவாக அவரை ஏற்று கர்மாக்களை சிரத்தையுடன் செய்யுங்கள், என்றார். பொருள் தெரியாமல் சொன்னாலும், மந்திரம் பலன் தரும் என்ற விளக்கம் கேட்டு பக்தர்களின் மனம் நிறைந்தது. திருப்பூர் கிருஷ்ணன்