ஏகாதசி விழா நிகழ்ச்சிகள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய அம்சமான சொர்க்க வாசல் திறப்பு டிச.29ல் நடக்கிறது. திருநெடுந்தாண்டக திருநாள் ஒரு நாளும், திருமொழி திருநாள் எனப்படும் பகல்பத்து உற்சவம் 10 நாளும், திருவாய்மொழி திருநாள் எனப்படும் இராப்பத்து உற்சவம் பத்து நாளும் என 21 நாட்கள் நடக்கும். நம்பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். அப்பொழுது பாசுரங்கள் பாடப்படும். அதனால் இதைத் திருமொழித் திருநாள் என்பர். பத்தாம் நாள் வைகுண்ட ஏகாதசியின்போது இந்தப் பாடல்கள் அபிநயத்துடன் அரையர்களால் சேவிக்கப்படும். இந்நாளில் ரங்கநாதர் ரத்ன அங்கியில் ஜொலிப்பார். இது மதுரை ராணி மங்கம்மா அளித்தது. வைகுண்ட ஏகாதசியிலிருந்து ஏழு நாட்கள் மூலவருக்கு, முத்தால் ஆன அங்கி அணிவிப்பர். இதை முத்தங்கி சேவை என்பர். இந்த திருக்கோலம் கண்களையும், கருத்தையும் கொள்ளை கொள்ளும். இராப்பத்தின் ஏழாம் நாள் கைத்தல சேவையும்; எட்டாம் நாள் திருமங்கை மன்னனின் வேடுபறி உற்சவமும்; பத்தாம் நாள் நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறும். இராப்பத்தின் 11ஆம் நாள் இயற்பா சாற்றுமுறை நடக்கும்.