கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்: பொள்ளாச்சி தேவாலயங்களில் ஆராதனை
பொள்ளாச்சி;பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், வீடுகளில் குடில்கள் மற்றும் கிறிஸ்துமஸ் மரம் வைத்து அலங்கரித்திருந்தனர். தேவாலயங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடத்துக்காக, மின்னொளி விளக்குகளில் ஜொலித்தன. பொள்ளாச்சி பாலக்காடு ரோடு புனித லுார்து அன்னை ஆலயத்தில், சிறப்பு ஆராதனை நேற்றுமுன்தினம் இரவு, 12:00 முதல் நேற்று அதிகாலை, 2:00 மணி வரை நடந்தது. தொடர்ந்து, அருள் தந்தை ெஹன்றி ஆண்டனி தலைமையில், கூட்டுப்பாடல் பலி நடந்தது. மத்திய பஸ்ஸ்டாண்ட் அருகேயுள்ள டி.இ.எல்.சி., மற்றும் மகாலிங்கபுரம் இந்திரா நகர் சி.எஸ்.ஐ., தேவாலயங்களில், சிறப்பு ஆராதனை நடந்தது. ஒருவொருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்தும், இனிப்புகளை வழங்கியும் பண்டிகையை கொண்டாடினர்.
வால்பாறை: வால்பாறையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. விழாவுக்காக, தேவாலயங்கள் அனைத்தும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. வால்பாறை ஆர்.சி., சார்சில் சிறப்பு பாடற்பலி, ஆராதனை நடந்தது. கோ - ஆப்ரேடிவ் காலனி சென்லுக் சர்ச், ரொட்டிக்கடை புனித வனத்துச்சின்னப்பர் ஆலயம், கருமலை வேளாங்கண்ணி ஆலயம் உள்ளிட்ட சர்ச்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.