ஈரோடு வைகுண்ட ஏகாதசி பெருவிழாவுக்காக, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், டிச 29ல் சொர்க்கவாசல் திறப்பு
ஈரோடு: வைகுண்ட ஏகாதசி பெருவிழாவுக்காக, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், தற்காலிக மூங்கில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டத்தில், பெரிய வைணவ தலங்களில், ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் பெருமாள் கோவிலும் ஒன்று. இங்கு, ஸ்ரீரங்கம் கோவில் முறைப்படி, வைகுண்ட ஏகாதசி விழா, நடந்து வருகிறது. வரும், 29ல் அதிகாலை செர்க்க வாசல் திறப்பு, அதன் பின் சுவாமி புறப்பாடு நடக்கிறது. ஏறக்குறைய ஒரு லட்சம் பேர், சொர்க்க வாசலை கடந்து, கஸ்தூரி அரங்கநாதரை தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது. இதனால், அன்று முழுவதும், கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே, தள்ளுமுள்ளுவை தவிர்க்க, மூங்கில் மேம்பாலம் அமைக்கப்படும். நடப்பாண்டும் அமைக்கப்பட்டுளள்ளது. சொர்க்க வாசல் திறப்பு நாளில் கோவிலுக்கு வரும் பக்தர்கள், ராஜகோபுரம் வழியாக நுழைந்து, சொர்க்க வாசல் வழியாக வெளியேறி, உற்சவரை தரிசனம் செய்த பின், மண்டபத்தின் முன்புள்ள, பெருமாள் பாதத்தை வணங்கி, அதன் பின், மூங்கில் மேம்பாலம் வழியாக சென்று, மூலவரை தரிசனம் செய்யலாம். அதன்பின் இடது புற வழியில், வெளியேறி, ராமானுஜர், ஆஞ்சநேயரை தரிசனம் செய்து, பிரசாதத்தை பெற்றுக் கொண்டு, அதே ராஜகோபுர வாசல் வழியில் வெளியில் வரவேண்டும் என்றும், அதிகாரிகள் தெரிவித்தனர்.