சபரிமலைக்கு 36 ஆண்டுகளாக யாத்திரை செல்லும் கிறிஸ்தவர்
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒருவர், 36 ஆண்டுகளாக மாலை அணிந்து, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, யாத்திரை சென்று வருகிறார். தஞ்சாவூர் மாவட்டம், புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேஸ்ராஜ், 65; விவசாயி. கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஜேஸ்ராஜ், 1980ம் ஆண்டு முதல், மாலை அணிந்து, விரதம் இருந்து, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு யாத்திரை சென்று வருகிறார். இந்த ஆண்டுடன், 36 ஆண்டுகளாகிறது. இது குறித்து, ஜேஸ்ராஜ் கூறியதாவது: கடந்த, 1977ம் ஆண்டு, எனக்கு மிகவும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உப்புவிடுதியைச் சேர்ந்த செல்வராசு என்பவர் அறிவுரைப்படி, மாலை அணிந்து, விரதம் இருந்து, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு யாத்திரை சென்று வந்தேன். இதனால், உடல் நலக்குறைவு நீங்கியது. அதன் பிறகும், 36 ஆண்டுகளாக மாலை அணிந்து, முறைப்படி விரதம் இருந்து, சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.