உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை): பிரச்னை இருந்தாலும் தெய்வ பலமும் இருக்குது!

விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை): பிரச்னை இருந்தாலும் தெய்வ பலமும் இருக்குது!

முயற்சியை தாரக மந்திரமாக கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!

கடந்த ஆண்டு சனி, குரு, ராகு ஆகியோர் சாதகமற்ற இடத்தில் இருந்ததால் இடர்பாடுகளை சந்தித்திருப்பீர்கள். குருவால் உங்கள் முயற்சியில்  தடைகள் ஏற்பட்டு இருக்கும். சிலர் வேலையை இழக்கும் நிலைகூட ஏற்பட்டு இருக்கலாம். சனி, ராகுவால் முயற்சிகளில் தோல்வி ஏற்பட்டு இருக்கும். பொருள் நஷ்டம், ஆரோக்கிய குறைவு வந்திருக்கலாம். கேது மட்டுமே பொருளாதார வளத்தை தந்தார். இந்த ஆண்டிலும் ஏழரையின் பிடியில் தான் இருக்கிறீர்கள். சனி 2-ம் இடத்தில் இருக்கும் போது குடும்பத்தில் பிரச்னைகளை உருவாக்குவார். பொருளாதார இழப்பு வரலாம். ஆனால் அவரது 10-ம் இடத்துப்பார்வை மூலம் கெடுபலன்கள் குறையும். ராகு 9-ம் இடமான கடகத்தில் இருப்பதும் சிறப்பல்ல. அவரால் திட்டங்களில் தடைகள் உருவாகலாம். கேது 3-ம் இடமான மகரத்தில் இருந்து இறை அருளையும், பொருள் உதவியையும் கொடுப்பார்.

குருபகவான் 12-ம் இடத்தில் இருப்பதால் பொருள் விரயம், தொல்லைகள், அலைச்சல் ஏற்படலாம். அவர் பிப்.14ல் உங்கள் ராசிக்கு வருவதும் நல்லதல்ல. எனினும் அவரது அனைத்து பார்வைகளும் சிறப்பாக உள்ளதால், கெடுபலன்களின் தன்மை குறைய வாய்ப்புண்டு. மொத்தத்தில், கேது தரும் தெய்வ அனுகூலத்ததால் எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம். குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். கணவன், -மனைவி இடையே அவ்வப்போது பிரச்னை வரலாம். விட்டுக் கொடுத்து போகவும். உறவினர் வகைகளில் விரோதம் ஏற்படலாம். அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு நிலைமை ஓரளவு மாறும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வசதியான வீட்டிற்கு குடிபோகலாம். தடைபட்டு வந்த திருமணம்  சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். புதிய வீடு, -மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.

தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். புதிய வியாபாரம்  தொடங்க வேண்டாம். அறிவை பயன்படுத்தி முன்னேற வழி காணுங்கள். ஆகஸ்டிற்கு பிறகு பணப்புழக்கம் ஓரளவு அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரணையாக நடந்து அவர்கள் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளவும். போட்டியாளர்கள் வகையில் முட்டுக்கட்டை இருக்கும். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காமல் போகலாம். இடமாற்றம் ஏற்படலாம். பணியிடத்தில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். ஒருவித பயம் ஆட்கொள்ளும். ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு கெடுபிடி குறையும். திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். எதிர்த்தவர்கள் உங்கள் நிலைமையை புரிந்து அனுசரணையுடன் நடப்பர். கலைஞர்கள் சுமாரான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் அவ்வளவு எளிதாக கிடைக்காது. அரசியல் வாதிகள் வசதியுடன் காணப்படுவர். பதவி தேடிவரும்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும். விரும்பிய பாடம் கிடைக்க கடும் முயற்சி வேண்டும். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்பவர்களுக்கு படிப்பு, பந்தயங்களில் வெற்றி உண்டு. விவசாயிகள் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான மகசூல் பெறுவர். சிலர் சொத்து, நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்புண்டு.  பெண்கள் கணவரிடம் விட்டு கொடுத்துபோகவும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பொறுமையும் நிதானமும் தேவை. ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு பொன், பொருள், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பரிகாரம்

* பவுர்ணமியன்று லட்சுமி பூஜை
* ஏழைகளுக்கு உதவி.
* சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றுதல்.செல்ல வேண்டிய தலம் திருச்செந்தூர் முருகன் கோயில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !