குழந்தைகள் நமது செல்வங்கள்
முஆவியா (ரலி) என்பவர் இறைவன் மீது அளவற்ற நம்பிக்கை கொண்டவர். அவருக்கு யஜீது என்ற மகன் இருந்தார். சில காரணங்களால் மகன் மீது கோபத்துடன் இருந்தார் முஆவியா. அப்போது அஹ்னஃப் (ரலி) என்பவர் முஆவியாவைப் பார்க்க வந்தார். தந்தைக்கும், மகனுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதை தெரிந்து கொண்டார். உடனே முஆவியாவிடம், “குழந்தைகள் நம் உள்ளங்களின் கனிகள். நமது இடுப்பில் சாய்ந்து கொள்ளும் உரிமை உடையவர்கள். நாம் பூமியைப் போல பொறுமையோடு இருந்து அவர்களுக்கு தொல்லை தராமல் நடந்து கொள்ள வேண்டும். வானம் நமக்கு நிழல் தருவது போல, நாம் அவர்களுக்கு நிழலாய் இருக்க வேண்டும். அவர்களை கொண்டே நாம் பலவற்றை சாதிக்க வேண்டியுள்ளது. அவர்கள் ஏதாவது கேட்டால், தாராளமாக கொடுக்க வேண்டும். அவர்கள் மனசோர்வுடன் காணப்பட்டால், அந்த சோர்வை நாம் போக்க வேண்டும். இப்படி செய்தால், அவர்கள் நம் மீது அன்பு செலுத்துவர். நாம் சொல்வதைக் கேட்பர். நாம், தாங்க முடியாத சுமையாக இருந்தால், நம்மை வெறுப்பர். இன்னும் சொல்லப் போனால், நம் தந்தை சாகமாட்டாரா எனக் கூட எண்ணுவர். நம் அருகிலேயே வரமாட்டார்கள்,” என்றார்.இதைக் கேட்டு முஆவியா(ரலி) மனம் தெளிந்தார். தன் மகன் யஜீதுக்கு 200 திர்ஹம் பணமும், 200 ஜோடி துணிகளும் வாங்கிக் கொடுத்தார்.குழந்தைகளிடம் பாசமாய் இருக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது.