மகரவிளக்கு தின முன்னேற்பாடு: அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
சபரிமலை: சபரிமலையில் மகரவிளக்கு நாளில் போதுமான முன்னேற்பாடுகள் செய்யுமாறு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.இந்த ஆண்டு அதிக அளவில் பக்தர்கள் மகர விளக்கு நாளில் கூடுவார்கள் என்று கருதப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக முதல்வர் பினராயிவிஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் அனைத்துத்துறை உயர் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது.
இதில் அவர் பேசியதாவது:மகரவிளக்கு பூஜையையொட்டி 13,14,15 தேதிகளில் அனைத்து துறைகளிலும் முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்ட மூத்த அதிகாரிகள் சன்னிதானத்தில் இருக்க வேண்டும். மகரவிளக்கு நாளுக்கு தேவையான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்து முடிக்க வேண்டும். புல்மேடு, உப்புப்பாறை, பாஞ்சாலிமேடு, பருந்தன்பாறை ஆகிய பகுதிகளில் பலமான தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும். தேவையான போலீசார் பணியில் இருக்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், டி.ஜி.பி., லோக்நாத் பெஹ்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.