கூவத்தூரில் தெப்ப உற்சவ கோலாகலம்
கூவத்துார் : கூவத்துார் திருவாலீஸ்வரர் கோவிலில், தைப்பூச தெப்ப உற்சவம் கோலாகலமாக துவங்கியது. கூவத்துாரில், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ், திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், 80 ஆண்டுகளுக்கு பின், திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த செப்., 10ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.தற்போது, தைப்பூசத்தை முன்னிட்டு, இங்குள்ள வாலிதீர்த்த குளத்தில், முதல்முறையாக, மூன்று நாட்கள் தெப்ப உற்சவம் நேற்று துவக்கப்பட்டது. கிராம தேவதை செல்லியம்மன், பிற தெய்வங்களான அங்காளம்மன், மாரியம்மன், நேற்று காலை, அவரவர் கோவிலிலிருந்து, திருவாலீஸ்வரர் கோவில் சென்று, சிறப்பு அபிஷேக வழிப்படு நடந்தது. அதைத்தொடர்ந்து, அவர்கள், சிறப்பு அலங்காரத்தில், மாலை, 6:25 மணிக்கு, விமான அலங்கார தெப்பத்தில் எழுந்தருளி, குளத்தில் ஏழு சுற்றுகள் வலம் வந்து, வீதியுலா சென்றனர். கூவத்துார் சுற்றுப்புற பக்தர்கள், தரிசித்தனர். இணை ஆணையர் அசோக்குமார், உதவி ஆணையர் ரமணி, செயல் அலுவலர் சங்கர், திருப்பணிக்குழு தலைவர் கோதண்டராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இன்று மாலை, ஆதிகேசவபெருமாள், தெப்ப உற்சவம் காண்கிறார்.