கண்ணபிரான் கோவில் கும்பாபிஷேகம்
திருத்தணி: திருத்தணி அடுத்த, தாழவேடு கிராமத்தில், பஜனை கோவில் தெருவில், புதிதாக கண்ணபிரான் கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம், கணபதி ஹோமத்துடன்துவங்கியது. இதற்காக கோவில் வளாகத்தில், ஒரு யாகசாலை, 108 கலசங்கள் வைத்து நவகிரக பூஜை, கோ பூஜை உட்பட, மூன்று கால யாக சாலை பூஜைகள் நடந்தன. நேற்று, காலை, 9:00 மணிக்கு, நான்காம் கால பூஜையும், காலை, 9:30 மணிக்கு, கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டன. காலை, 10:00 மணிக்கு, கோவில் விமானத்தின் மீது கலச நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மாலை, 6:30 மணிக்கு, உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 10:00 மணிக்கு, நாடகம் நடந்தது. விழாவில் தாழவேடு, திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.