ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா துவக்கம்: 20 நாட்கள் நடக்கிறது!
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதஸ்வாமி கோவில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை துவங்கி, 20 நாட்கள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வரும் ஜனவரி ஐந்தாம் தேதி அதிகாலை நடக்கிறது. பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதஸ்வாமி கோவிலில் வரும் 25ம் தேதி (நாளை) வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் துவங்குகிறது. வரும் ஜனவரி 16ம் தேதி வரை 20 நாட்கள் பகல்பத்து எனவும், ராப்பத்து எனவும் விழா நடக்கிறது. வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு 25ம் தேதி மாலை 4.30 மணியுடன் மூலவர் சேவை நிறுத்தப்படுகிறது. அதன்பின் இரவு ஏழு மணிக்கு கர்ப்பகிரஹத்தில் திருநெடுந்தாண்டகமும் நடக்கிறது. ஒன்பது மணி முதல் 9.30 மணி வரை திருப்பணியாரம் அமுது செய்யப்படுகிறது. இரவு 10 மணி வரை கோஷ்டி சேவை நடக்கிறது. 10.30 மணி வரை திருவாராதனம் செய்யப்படுகிறது. 11 மணிக்கு திருக்கொட்டாரத்திலிருந்து சிறப்பலங்காரம் செய்யப்படுகிறது. பின் 11.30 மணி வரை தீர்த்தகோஷ்டி நடக்கிறது. 26ம் தேதி முதல் பகல்பத்து விழா நடக்கிறது. அன்று முதல் 20 நாட்கள் மூலவருக்கு முத்தங்கி சேவை நடக்கிறது. பகல் பத்து ஜனவரி நான்காம் தேதி நடக்கிறது. அன்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல், ராப்பத்து முதல்நாளான ஐந்தாம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நடக்கிறது.