வடபழனியில் தங்க ரத புறப்பாடு
வடபழனி: முருகன் கோவில்களில், தைப்பூச திருவிழா களை கட்டி உள்ளது. பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.தைப்பூசம், முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழா. ஆண்டுதோறும் தை மாதம், பூச நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் கூடி வரும் நாளில், முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைபூசம். அன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.தை பூசத்தன்று, முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு, ஒரு விழாவாக, பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது. சிவபெருமான், உமாதேவியுடன் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள், தைப்பூசம் என்பர்.தமிழக முருகன் கோவில்களில், பூச நட்சத்திரம், பவுர்ணமி அன்று; பூச நட்சத்திரம் பிறப்பை கணக்கிட்டு; சந்திரகிரஹணம் வருவதால், அடுத்த நாள் என பிரித்து, தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது.கந்தக்கோட்டம், குன்றத்துார் முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், குரோம்பேட்டை, குமரன் குன்றம் கோவில், சைதாப்பேட்டை, காரணீசுவரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும், இன்று தைப்பூச விழா நடக்கிறது.விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோவில், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் முருகன் கோவில், குமரக்கோட்டம், வல்லக்கோட்டை உள்ளிட்ட பல கோவில்களிலும், தைப்பூசம் களை கட்டியுள்ளது.சென்னை, வடபழனியாண்டவர் கோவிலில், தைப்பூச திருவிழா, நேற்று இரவு துவங்கி, கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், பால் குடம், காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.தைப்பூச பால் காவடி சபை சார்பில், இரண்டு நாட்கள் விழா, விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இன்று காலை, 6:00 மணிக்கு, காவடிகளுக்கு அபிஷேக அலங்காரம் நடக்கிறது. காலை, 7:00 மணி முதல், மிளகாய் சாந்து அபிஷேகம்; தகட்டில், கடப்பாரை உருவுதல்; மார் மீது கல் உரல் வைத்து மஞ்சள் இடித்தல் போன்ற நிகழ்வுகள் நடக்க உள்ளன. நாளை வடபழனி ஆண்டவருக்கு சந்தனக்காப்பு, இரும்பர் அபிஷேகம், தங்க ரத புறப்பாடு நடக்கிறது.