உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பஞ்சாமிர்தம் டப்பாவில் தயாரிப்பு, காலாவதி தேதிகள்

பழநி பஞ்சாமிர்தம் டப்பாவில் தயாரிப்பு, காலாவதி தேதிகள்

பழநி: பழநி முருகன் கோவில் பிரசாதமான பஞ்சாமிர்தம் டப்பாவில், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை குறிப்பிட, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.பஞ்சாமிர்தத்தை முறைப்படி தயார் செய்தால், மூன்று மாதங்களுக்கு பயன்படுத்தலாம்.வாழைப்பழம், கற்கண்டு, சர்க்கரை, நெய், பேரீச்சம்பழம் போன்ற ஐந்து பொருட்களை கொண்டு, பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது.

பழநி கோவில் சார்பில், அபிஷேக பஞ்சாமிர்தம், நவீன இயந்திரங்கள் மூலம் தயாரித்து, விற்பனை செய்யப்படுகிறது. 500 கிராம் டப்பா, 35க்கும், டின், 40 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டிற்கு, 25 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. பஞ்சாமிர்தம் பிரசாதம் என்பதால் தயாரிப்பு, காலாவதி தேதி குறிப்பிடுவது இல்லை. உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள், அவ்வப்போது, தயாரிப்பை ஆய்வு செய்கின்றனர். இருப்பினும், உணவுப் பொருளாக இருப்பதால், தயாரிப்பு, காலாவதி தேதி குறிப்பிட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இதையடுத்து, பஞ்சாமிர்தம் டப்பாவில் தயாரிப்பு, காலாவதி தேதி குறிப்பிட, பழநி கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.கோவில் இணை ஆணையர் செல்வராஜ் கூறுகையில், உணவு பாதுகாப்புத் துறை விதிகளுக்கு உட்பட்டு, பஞ்சாமிர்தம் தயாரித்து, எத்தனை நாட்கள் வரை பயன்படுத்தலாம் என, டப்பாவில் குறிப்பிட முடிவு செய்துள்ளோம். அதற்கான பணிகள் துவங்கியுள்ளன. விரைவில் நடைமுறைக்கு வரும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !