உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வினை விதைத்தால்வினை

வினை விதைத்தால்வினை

ஒரு கணவன், தன் மனைவியை காரணமில்லாமல் இம்சை செய்தான். ஒரு  கட்டத்தில் அவளைப் பிடிக்காமல், இன்னொருத்தியை திருமணம் செய்ய முடிவு எடுத்தான். இதை அவள் எதிர்த்தாள். ஆத்திரமடைந்த கணவன், அவளை நேரடியாக கொன்றால், வழக்குகளில் சிக்க வேண்டும் எனக்கருதி, ஒரு மந்திரவாதியை சந்தித்து ஆலோசனை கேட்டான்.  அவன் ஒரு மருந்தை கொடுத்து, “இதை உன் மனைவிக்கு கொடு. அவளுக்கு பைத்தியம் பிடித்து விடும். பைத்தியக்காரியுடன் வாழ முடியாதென கூறி, விவாகரத்து செய்துவிட்டு, விரும்புபவளை திருமணம் செய்து கொள்,” எனச் சொல்லி, ஒரு பெருந்தொகையை வாங்கி கொண்டு அனுப்பி விட்டான்.

மருந்துடன் வந்த கணவன், நல்லவன் போல் நடித்து, இவ்வளவு நாளும் அவளைத் துன்புறுத்தியதற்காக மன்னிப்பு கேட்டான். பின்னர், அந்த மருந்தை கொடுத்து,  “இதைக் குடி. நான் இவ்வளவு நாளும் உன்னை அடித்ததால் ஏற்பட்ட ரணம் தீர்வதுடன், உடலும், உள்ளமும் மகிழ்ச்சியாகும்,” என்றான். அவளுக்கு தெரியும்; தன் கணவனின் சுயரூபம். குடிக்க மறுத்து விட்டாள். மீண்டும் ஆரம்பித்தது சித்திரவதை. வலுக்கட்டாயமாக வாயில் மருந்தை ஊற்றினான். அவள் ஆண்டவரிடம் பிரார்த்தித்தாள்.  அவரது அருளால் அந்த மருந்து அவளை ஏதும் செய்யவில்லை. பணம் செலவழித்தும், பயனேதும் இல்லையே என்ற ஆத்திரத்தில் மந்திரவாதியிடம் சென்று, சண்டை போட்டான்.

தகராறு வலுத்ததில் மந்திரவாதியின் தலையை பிடித்து, சுவரில் மோதினான். மந்திரவாதி தலையில் அடிபட்டு இறந்தான். இவன் சிறைக்கு போனான். வினை செய்த இருவரும், தங்கள் பாவத்திற்குரிய தண்டனையை பெற்று விட்டார்கள்.  கொடுமைக்கார கணவனிடமிருந்து விடுதலை பெற்ற அப்பெண், தன்னை காப்பாற்றிய ஆண்டவரின் ஆலயம் ஒன்றில் பணிபுரிந்து நிம்மதி பெற்றாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !