உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் தமிழக பக்தர்கள் வரவு குறைந்தது: தேவசம்போர்டு!

சபரிமலையில் தமிழக பக்தர்கள் வரவு குறைந்தது: தேவசம்போர்டு!

சபரிமலை: சபரிமலையில் தமிழக பக்தர்களின் வருகை கணிசமான அளவு குறைந்துள்ளது எனினும் வருமானத்தில் குறைவு ஏற்படவில்லை என்று தேவசம்போர்டு தலைவர் அட்வகேட் ராஜகோபாலன் நாயர் கூறினார். சன்னிதானத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த இரண்டு வார காலமாக சபரிமலைக்கு வரும் தமிழக பக்தர்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்து விட்டது, எனினும் சபரிமலை வருமானத்தில் எந்த குறைவும் ஏற்படவில்லை. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 19 கோடியே 88 லட்சம் ரூபாய் அதிக வருமானம் வந்துள்ளது. மண்டல காலத்தில் 39 நாட்களில் மொத்த வருமானம் 114 கோடியே 64 லட்சம் ரூபாய் ஆகும். கடந்த ஆண்டு வருமானம் இதே கால அளவில் 94 கோடியே 78 லட்சம் ரூபாயாக இருந்தது. நெய்யபிஷேக டிக்கெட்டுகள் ஒரு கோடியே 47 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது. அரவணை விற்பனையில் 48 கோடியே 97 லட்சம் ரூபாயும், அப்பம் விற்பனையில் ஒன்பது கோடியே 76 லட்சம் ரூபாயும், காணிக்கையாக 41 கோடியே 58 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த வாரம் சில அரவணை டின்கள் உடைந்து ஒழுகிய சம்பவம் பற்றி தேவசம்போர்டு விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக தர பரிசோதனையும், ஆய்வக சோதனையும் நடைபெற்று வருகிறது. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.தற்போது எஸ்.பி. ரேங்கில் ஒரு அதிகாரியின் கண்காணிப்பில் பிரசாசம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இனி ஒரு சம்பவம் இது போல் நடைபெறாமல் இருக்க போர்டு கவனமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !