உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை1)

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை1)

இரண்டும் கலந்திருக்கு இவ்வாண்டில் இணைஞ்சிருக்கு! (60/100)

உதவும் மனமுள்ள மேஷராசி அன்பர்களே!

பிரதான கிரகங்களான குரு, சனி, ராகு-கேதுவின் அமர்வு இந்த வருடம் நன்மையும் சிரமமும் கலந்த பலன்களைத் தரும் வகையில் உள்ளது. இதுவரை நீங்கள் பின்பற்றிய சில நடைமுறைகளை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். தொழில் சிறந்து வாழ்வில் வளம்பெற வாசல் திறக்கும். பேச்சில் சாந்தம், வசீகரத்தன்மை இருக்கும். வீடு, வாகன வகையில் கிடைக்கிற வசதி சுமாராக இருக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி உண்டு.புத்திரர்கள் செயல்திறன் வளர்த்து படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். பூர்வ சொத்தின் வழியாக நல்ல வருமானமும் புதிய சொத்து வாங்குவது மான சந்தோஷ நிகழ்வு ஏற்படும். உங்களுக்கு எதிராக செயல்படுபவர்களின் அடாவடித்தனம் பெருமளவில் முடங்கிப்போகும். உடல்நலம் பேணுவதில் அதிக கவனம் வேண்டும்.  கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உள்ளவர்கள், இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை. நண்பர்களின் கேலிப்பேச்சை பெரிதுபடுத்தாமல், யதார்த்த சிந்தனையுடன் அணுகுவதால் மட்டுமே நட்பு பலம்பெறும். தந்தைவழி உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு பொறாமைப்படலாம். குடும்பத்தில் திட்டமிட்ட மங்கல நிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும்.

சிரமங்களை மனத்துணிவுடன் சந்தித்து வெற்றி பெறுவீர்கள். வெளியூர் பயணம் கூடுதல் செலவை ஏற்படுத்தும். இந்த ஆண்டு உங்களுக்கு கிடைக்கும் சில
சிரமமான அனுபவ பாடங்கள் எதிர்காலத்துக்கு வழிகாட்டியாக இருக்கும். முதல் நான்கு மாதங்கள் சற்று சிரமப்பட்டாலும், மே மாதம் வரும் குரு பெயர்ச்சியில் ஜென்ம குரு விலகுவதால், அடுத்த ஏழு மாதங்கள் நிலைமை நன்றாக இருக்கும்.

தொழிலதிபர்கள்: ஓட்டல், லாட்ஜ், மருத்துவமனை, ரியல் எஸ்டேட், ஒப்பந்ததாரர், கல்வி, நிதி நிறுவனம் நடத்துவோர், காகிதம், ஆட்டோ மொபைல்ஸ், டெக்ஸ்டைல்ஸ், எலக்ட்ரிக்கல்,  எலக்ட்ரானிக்ஸ் சாதனம், குளிர்பானம், மினரல் வாட்டர் உற்பத்தியாளர்கள் தொழிலில் மாற்றங்களைப் பின்பற்றி பலன் அடைவார்கள். மற்ற தொழில் செய்பவர்கள் ஆர்வத்துடன் செயல்பட்டால் வளர்ச்சியும் திட்டமிட்ட வருமானமும் கிடைக்கும். தரத்தில் வரும் குறையை நிபுணர்களின் துணையால் சரிசெய்வது நல்லது. தொழிலில் அளவான மூலதனம் போதும். தொழிற்சாலை பாதுகாப்பு நடைமுறைகளை கவனமுடன் பின்பற்ற வேண்டும். லாபம் போதுமானதாக இருக்கும்.

வியாபாரிகள்: ஓட்டல், நகை, ஜவுளி, மளிகை, அரிசி, கட்டுமானப் பொருள், ஆட்டோமொபைல் உதிரிபாகம், மருந்து, மின்னணு மின்சார உபகரணம், மினரல்
வாட்டர், தோல் பொருள் வியாபாரம் செய்பவர்கள் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வர். லாபம் நன்றாக இருக்கும். மற்ற வியாபாரிகளுக்கு போட்டி குறைந்து விற்பனை அதிகரிக்கும். மே மாதத்துக்குப் பிறகு, லாபம் உயர்ந்து சேமிக்கும் நிலை அமையும். புதிய கிளை துவங்குவதற்கான முயற்சி செயல்வடிவம் பெறும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணிகளை விரைந்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். பதவி உயர்வு, எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வழக்கமான வருமானத்துக்கு குறைவில்லை. சக பணியாளர்கள் கருத்து வேற்றுமையை மறந்து உதவிகரமாக நடந்துகொள்வர். வருமானம் அதிகரிப்பதால் குடும்பத்தின் தேவைகளை சிரமமின்றி நிறைவேற்றுவீர்கள்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனத்துடன் பின்பற்றி பாராட்டைப் பெறுவர். சம்பள உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். குடும்பப் பெண்கள் குடும்ப நன்மைகளை கவனத்தில் கொண்டு பொறுமையுடன் செயல்படுவர். கணவரின் அன்பு, சீரான பணவசதி அமைந்து நிம்மதி கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையை உயர்த்துவர். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டு. மாணவர்கள்: கம்ப்யூட்டர், இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், விவசாயம், கலை, அறிவியல், வணிகவியல், மேனேஜ்மென்ட் படிப்பு, ஆசிரியர் பயிற்சி துறை சார்ந்த மாணவர்கள் ஒருமித்த மனதுடன் படித்து உயர்ந்த மதிப்பெண் பெறுவர். மற்ற துறை மாணவர்கள் இவர்களை விட நன்றாகப் படிப்பர். உயர்நிலை, மேல்நிலை மாணவர்களின் மார்க் உயரும். படிப்புக்கான பணவசதி சுமாராக இருக்கும். சக மாணவர்கள் படிப்பு விஷயத்தில் ஒத்துழைப்பார்கள்.

அரசியல்வாதிகள்: நற்பெயரை பாதுகாப்பதில் முழு கவனத்துடன் செயல்படுவீர்கள். ஆதரவாளர்களின் தேவைகளை நிறைவேற்ற செலவு அதிகமாகும். அரசு வழி உதவிகளைப்பெற அதிகாரிகளின் ஒத்துழைப்பு நல்லவிதமாக கிடைக்கும். விவசாயிகள்: விவசாயப் பணிகளை நிறைவேற்ற அனைத்து வசதியும் கிடைக்கும். மகசூல் சிறந்து கூடுதல் பணவரவு கூடும். கால்நடை வளர்ப்பில் முன்னேற்றம் உண்டு.

குருபெயர்ச்சி : ராசிக்கு 9,12 க்கு அதிபதியான குரு, மே 16 வரை மேஷத்தில் சஞ்சரிக்கிறார். பின் ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதனால், ஆண்டின் முற்பகுதியில் பணியில் மந்தநிலை, வாக்குவாதம், தடுமாற்றம்  ஏற்பட வாய்ப்புண்டு. எந்தச்செயலையும் நிதானத்துடன் அணுகுவது நல்லது. மே17 முதல் குருவின் 5,7,9 ஆகிய பார்வைகள் 6,8,10 ஆகிய ஸ்தானங்களில் விழுகின்றன. ஆண்டின் பிற்பகுதியில் குருவால் நற்பலன் உண்டாகும். எதிரிகளின் தொல்லை குறையும். கடன் பாக்கி பெருமளவில் அடைபடும். தொல்லை கொடுத்துவந்த நோய் நொடி இருந்த இடம் தெரியாமல் மறையும். செய்யும் கடமையில் ஆர்வம் பிறக்கும். பணிச்சுமையில் இருந்து விடுபடுவதோடு, ஆதாயமும் கூடும். தொழிலைவிரிவுபடுத்தும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

ராகுகேது பெயர்ச்சி : ராசிக்கு எட்டாம் வீடான விருச்சிகத்தில் ராகு இருப்பதால், முயற்சிகளில் தடை ஏற்படும். செயல் நிறைவேற விடாமுயற்சியும், விழிப்புணர்வும் தேவைப்படும். சிலருக்கு விருப்பமில்லாமல் வெளியூர், வெளிநாடு சென்று வரும் கட்டாயம் ஏற்படும். மே 17ல் ரிஷபகுருவால், ராகுவால் உண்டாகும் பிரச்னைகள் பெருமளவில் குறையும். ஆண்டின் இறுதியில் (டிசம்பர் 2) ராகு ஏழாம் வீடான துலாமில் பிரவேசிக்கிறார். கேது ராசிக்கு இரண்டாம் வீட்டில் அனுகூலமற்று இருக்கிறார். இதனால், முக்கியமான பொறுப்புகளை உங்கள் நேரடி கவனத்தில் வைத்துக் கொள்வது அவசியம். பணவிஷயத்தில் பாதுகாப்பு மிக தேவைப்படும். நெருப்பு, மின்சாரம் சார்ந்து பணியாற்றுபவர்கள் விழிப்போடு இருப்பது நல்லது. குருவின் ரிஷப மாறுதலால், கேதுவுடன் சேர்ந்து கேளயோகம் உண்டாகிறது.  எண்ணம், சொல், செயலில் ஆன்மிக மணம் கமழும்.

பரிகாரம் : விநாயகரை வழிபடுவதால் வாழ்வில் துன்பம் விலகி நன்மை சேரும்.

பரிகாரப் பாடல்:
வாரணத்தானை அயனை
விண்ணோரை மலர்க்கரத்து
வாரணத்தானை மகத்துவ
வென்றோன் மைந்தனை
துவஜ வாரணத்தானை
துணை நயந்தானை வயல் அருணை
வாரணத்தானை திறை கொண்ட
யானையை வாழ்த்துவனே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !