உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடலூரில் சிவராத்திரி விழா: ஆதிவாசிகள் சிறப்பு பூஜை

கூடலூரில் சிவராத்திரி விழா: ஆதிவாசிகள் சிறப்பு பூஜை

கூடலுார்:கூடலுார், அல்லுார்வயல் பகுதியில் உள்ள கோவிலில் சிவராத்தி திருவிழா நடந்தது. கூடலுார், தொரப்பள்ளி அல்லுார்வயல் அருகே, தனியார் எஸ்டேட் பகுதியில், உள்ள, பழமையான கோவிலில் சிவராத்திரி விழா கொண்டாட ஆதிவாசிகள் சென்றனர். அதற்கு எஸ்டேட் நிர்வாகம் தடைவிதித்தது. இதனை கண்டித்து, நேற்று முன்தினம், ஆதிவாசி உள்ளிட்ட அப்பகுதி மக்கள், கூடலுார் காந்தி திடல் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 160 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாலையில், அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து, மாற்றுவழி வழியாக அப்பகுதி மக்கள் இரவு, 7:00 மணிக்கு, அல்லுார்வயல் அருகேயுள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, கோவிலில் விடிய, விடிய ஆதிவாசி மக்களின் பாரம்பரிய நடனம் நடந்தது. நேற்று காலை, சிறப்பு பூஜைகள் நடந்தது. தொரப்பள்ளி குணில்வயல் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூஜை செய்தனர். தொடர்ந்து ஆதிவாசி உள்ளிட்ட மக்கள் ஊர்வலமாக, அல்லுார்வயல் கோவிலுக்கு வந்தடைந்தனர். கோவிலில், நடந்த சிறப்பு பூஜைக்கு பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 4:30 மணி முதல் சுவாமி ஆடி குறி சொல்லும் நிகழ்ச்சி நடந்தது. இரவு சிறப்பு பூஜையுடன் விழா நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !