கடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)
வீடு கட்டுறீங்க, கார் வாங்குறீங்க (60/100)
யாராலும் புரிந்து கொள்ள முடியாத மனநிலை உடைய கடகராசி அன்பர்களே!
பிரதான கிரகங்களில் குரு, கேது உங்களுக்கு நல்ல பலன்களை வழங்குகிற வகையில் உள்ளனர். எண்ணத்திலும் செயலிலும் உற்சாகம் பிறக்கும். பேச்சில் நிதானமும் விவேகமும் கலந்திருக்கும். சமூகத்தில் பெறுகிற நற்பெயரை துணையாக கொண்டு நல்வழியில் நடைபோடுவீர்கள். பசு, பால் பாக்ய யோகம் நிறைந்த வாழ்வுமுறை கிடைக்கும். பணவரவு நன்றாக இருக்கும்.
வீடு, வாகனத்தில் தேவையான வளர்ச்சி மாற்றம் செய்து மகிழ்வீர்கள். விலகிய தாய்வழி சொந்தங்கள் விரும்பி வந்து சேர்வர். புத்திரர்கள் பிடிவாத குணத்துடன் தகுதி குறைவான செயல்களில் ஈடுபடுகிற கிரகநிலை உள்ளது. அவர்களை அன்புடன் கண்டித்து வழி நடத்துங்கள். அதிக கண்டிப்பு பிரச்னைகளை இன்னும் அதிகமாக்கும். அர்த்தாஷ்டம சனி காலம் என்பதால் உடல்நிலையில் கவனம் வேண்டும். பூர்வசொத்தில் கிடைக்கிற வருமானத்திற்கேற்ப புதிய செலவினங்களும் உண்டாகும். வெகுநாள் தாமதமான செயல்பாடுகள் நிறைவேறும். எதிரிகளின் செயலை சமயோசிதமாக முறியடிப்பீர்கள். மூத்த சகோதர, சகோதரிகள் அனுசரணையுடன் நடந்து உங்களுக்கு பல வகையிலும் உதவுவர்.
குடும்பத்தின் முக்கிய தேவை பெருமளவில் நிறைவேறும். பொது இடங்களில் நடக்கும் விஷயங்களில் தலையிடுவதால் சிரமம் வரலாம். அந்த இடங்களை விட்டு அகன்று விடுவது நல்லது. புதிய வீடு, வாகனம் வாங்குகிற திட்டம் இனிதாக நிறைவேறும். பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்லக்கூடாது. பாதுகாப்பற்ற முதலீடு, பாதுகாப்பற்ற செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு அவ்வப்போது ஏற்பட்டு மறையும். விட்டுக்கொடுத்து நடப்பதால் நன்மை உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியும், உறவினர் வருகையால் நன்மையும் உண்டாகும்.
தொழிலதிபர்கள்: மருத்துவமனை, லாட்ஜ், ஓட்டல், டிராவல் ஏஜென்சி, டிபார்ட்மென்டல் ஸ்டோர், நிதி, கல்வி நிறுவனம், பால்பண்ணை, அரிசி ஆலை, அச்சகம் நடத்துவோர், டெக்ஸ்டைல்ஸ், பிளாஸ்டிக், மின்சார மின்னணு சாதனம், வாகன உதிரிபாகம், தோல், கட்டுமானப் பொருள் உற்பத்தி செய்பவர்கள் தொழிலில் சிறு குறுக்கீடுகளை எதிர்கொண்டாலும், மன உறுதியுடன் நல்லவர்களின் உதவியால் நிலைமையை சரிசெய்வார்கள். மற்ற தொழில் செய்பவர்களுக்கு இவர்களை விட சிரமம் குறைவே. மே 17க்கு பிறகு குரு பெயர்ச்சியால் இந்த குறுக்கீடுகள் பெருமளவு விலகி விடும். உற்பத்தியும் தரமும் திட்டமிட்ட அளவை எட்டும். லாபம் எதிர்பார்த்தை விட அதிகமாகும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நல்லவிதமாக கிடைக்கும்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, தோல், பிளாஸ்டிக், காய்கறி, பழம், மின்சார, மின்னணு சாதனங்கள், பால்பொருள், வாகனம், ஆட்டோமொபைல் உதிரி பாகம், கட்டுமானப் பொருள், அழகு சாதனம், ஸ்டேஷனரி, மருந்து, பாத்திரம், மலர், இறைச்சி, மினரல் வாட்டர், குளிர்பானம், கடல்சார் பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு விற்பனை சிறப்பாக இருக்கும். லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். மற்ற வியாபாரிகளுக்கும் போட்டி பெருமளவில் குறைவதால் நிறைந்த லாபம் சம்பாதிப்பர்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் உற்சாகமாக செயல்படுவர். அதிகாரிகள் கொடுத்த பணியை சரி வர செய்து நற்பெயர் பெறுவீர்கள். மே மாதத்துக்கு பிறகு தற்போதைய சலுகைகளை விட அதிகம் பெறுவீர்கள். ஓவர் டைம், சம்பள உயர்வு கிடைக்கும். சக பணியாளர்கள் ஒத்துழைப்பு குறையும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் வேகமாக பணிகளை முடித்து, நிர்வாகத்திடம் பாராட்டு, சலுகை பெறுவர். நீங்கள் எதிர்பார்க்கும் இடமாற்றம் போன்றவை வருட ஆரம்பத்தில் தாமதப்படும். குடும்பப் பெண்கள் கணவருடன் கருத்து வேறுபாடு கொள்ள நேரலாம் என்றாலும், பெரிய பிரச்னைகள் வரும் அளவுக்கு இராது. குடும்பச் செலவுக்கான பணவசதிக்கு குறை விருக்காது. சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையை கடும் உழைப்பால் உயர்த்துவர்.
மாணவர்கள்:மருத்துவம், இன்ஜினியரிங், சட்டம், கலை, அறிவியல், கம்ப்யூட்டர், ஆசிரியர் பயிற்சி, கேட்டரிங், விவசாய மாணவர்கள் ஞாபகத்திறனை வளர்த்துக்கொள்வதால் திட்டமிட்ட தேர்ச்சி அடைவர். மற்ற துறை மாணவர்கள் சிறப்பாகப் படிப்பர். ஆரம்ப, மேல்நிலை பள்ளி மாணவர்கள் பெற்றோரின் கருத்துக்கு மதிப்பளித்து, நேரத்தை வீணடிக்காமல் படித்தால் பிரச்னையின்றி முன்னேறலாம். படிப்புக்கான பணவசதி திருப்திகரமாக இருக்கும். சக மாணவர்களின் கருத்துக்களை விமர்சிக்கக்கூடாது. சுற்றுலா பயணங்களில் தகுந்த பாதுகாப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
அரசியல்வாதிகள்: ஆதரவாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் கவனம் கொள்வீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் முக்கிய செயல்பாடுகள் நிறைவேறும். சமூகத்தில் நல்ல அந்தஸ்து பெறுவீர்கள். புதிய சொத்து சேர்க்கை உண்டு. அரசியல் பணியில் புத்திரர்களின் பங்களிப்பு சில சிரமங்களைத் தரலாம். அவர்களை ஒதுக்கி வைப்பது நல்லது. எதிரிகளால் இருந்த தொல்லை குறைந்து முன்னேற்றம் பெறலாம்.
விவசாயிகள்: விவசாயப் பணிகளில் இருந்த தாமதம் விலகி நல்வழி பிறக்கும். அதிகபட்ச மகசூல் பெறுவீர்கள். கால்நடை வளர்ப்பிலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நிலம் தொடர்பான விவகாரம் இருந்தால் அனுகூல தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும்.
குருபெயர்ச்சி : ராசிக்கு 6,9 க்கு அதிபதியான குரு, மே 16 வரை மேஷத்தில் சஞ்சரிக்கிறார். பின் ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதனால், ஆண்டின்
முற்பகுதியில் குருவால் அனுகூலபலன் உண்டாகும். மனைவி, மக்களால் கவுரவம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். மே17 முதல் குருவின் 5,7,9 ஆகிய பார்வைகள் 3,5,7 ஆகிய ஸ்தானங்களில் பதிகின்றன. ஆண்டின் பிற்பகுதியில் இளைய சகோதரர்களின் வகையில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். பிள்ளைகள் உங்களின் பேச்சுக்கு மதிப்பளிப்பர். மனைவிவழியில் அனுகூலம் உண்டு. நண்பர்களின் உதவியும், ஆலோசனையும் தக்கதருணத்தில் கிடைக்கும்.
ராகுகேது பெயர்ச்சி : ராசிக்கு ஐந்தாம் வீடான விருச்சிகத்தில் ராகு அனுகூலமற்று இருப்பதால், முயற்சிகளில் தடை ஏற்படும். செயல் நிறைவேற விடாமுயற்சி தேவைப்படும். சிலருக்கு விருப்பமில்லாமல் வெளியூர், வெளிநாடு சென்று வரும் கட்டாயம் ஏற்படும். மே 17ல் ரிஷபகுருவால், ராகுவால் உண்டாகும் பிரச்னைகள் பெருமளவில் குறையும். ஆண்டின் இறுதியில் (டிசம்பர் 2) ராகு நான்காம் வீடான துலாமில் பிரவேசிக்கிறார். கேது ராசிக்கு பதினொன்றாம் வீட்டில் ஆண்டு முழுவதும் சுபபலத்துடன் இருக்கிறார். இதனால், முக்கியமான பொறுப்பு உங்களைத் தேடிவரும். சேமிக்கும் விதத்தில் வருமானம் இரட்டிப்பாக உயரும். ஆடை, ஆபரணச்சேர்க்கை அவரவர் தகுதிக்கேற்ப உண்டாகும். தீர்த் தயாத்திரை, மகான்களின் ஆசி போன்ற சுபபலன்களும் கிடைக்கும். குருவின் ரிஷப மாறுதலால், கேதுவின் சேர்க்கை குருவிற்கு ஏற்படுகிறது. இறுதியில் கேது பத்தாம் இடமான மேஷத்திற்குப் பெயர்ச்சியாகிறார்.
பரிகாரம் : முருகப்பெருமானை வழிபடுவதால் வாழ்வில் சிரமம் குறைந்து நன்மை வளரும்.
பரிகாரப் பாடல்
நாள் என் செயும் வினைதான் என் செயும்
எனை நாடி வந்த கோள் என் செயும்
கொடுங்கூற்று என் செயும் குமரேசர் இருதாளும்
சிலம்பும் சதங்கையும் தண்டையும்
சண்முகமும் தோளும் கடம்பும்
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!