உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1)

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1)

அள்ளுங்க! வாரிக் கொள்ளுங்க (75/100)

எண்ணங்களை வெற்றிகரமாக செயல்படுத்த அரும்பாடு படும் சிம்மராசி அன்பர்களே!

புத்தாண்டில் பிரதான கிரகங்களான குரு மே மாதம் வரையிலும், சனி ஆண்டு முழுவதும் நற்பலன் வழங்குவர். ராகு, கேது சிறு அளவிலான சிரமத்தை தரலாம். ஏழரைச் சனியின் காலம் முடிவடைந்து விட்டதால், நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு தீர்வு வரும். பணவரவு நன்றாக இருக்கும் என்றாலும், மே மாதத்தில், நிகழும் குரு பெயர்ச்சிக்குப் பிறகு குடும்பத்தேவைகளை நிறைவேற்ற செலவு அதிகரிக்கும். சமூகத்தில் பெற்ற மதிப்பை தக்க வைத்துக் கொள்ள கவனமுடன் 
செயல்படுவீர்கள்.

வீடு, வாகன வகையில் நல்ல வசதி கிடைக்கும். தாயின் அன்பு, ஆசி பெற அவர்களின் தேவையை நிறைவேற்றுவது நல்லது. புத்திரர்கள் நற்குணங்களைப் பின்பற்றி குடும்பத்திற்கு பெருமை தேடித்தருவர். பூர்வசொத்தில் பெறுகிற வருமானத்தின் அளவு உயரும். புதிய மனை, வீடு வாங்கும் யோகம் உண்டு. இஷ்ட, குலதெய்வ வழிபாடு நிறைவேறி பரிபூரண அருளை பெற்றுத்தரும். எதிரிகளின் நடவடிக்கை அதிகரிப்பதால் சில சிரமங்கள் வரலாம். உங்களை தற்காத்துக்கொள்ள கூடுதல் கவனமும், பாதுகாப்பு நடைமுறைகளும் அவசியம். உடல்நலம் சீராக இருக்கும், வழக்கு, விவகாரத்தில் அனுகூலம் உண்டு. நண்பர்கள் உங்களுக்கு நல்ல ஆலோசனை, தேவையானஉதவி வழங்குவர். கணவன், மனைவி ஒற்றுமையுடன் நடந்து, பெருமித உணர்வுடன் செயல்படுவர். இருவரின் இணைவால் வருமானம் கூடும். தந்தைவழி உறவினர்கள் சொல்லுகிற வழிகாட்டுதலை பின்பற்றுவதால் புதிய திருப்பம் உருவாகும். தன, தான்ய லாபமும் சுக சவுபாக்ய வாழ்க்கை முறையும் சிறப்பாக கிடைக்கும். வெளியூர் பயணத்தால் புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவர். அவர்களால் வருமானத்துக்கும் வழியுண்டு. மொத்தத்தில்  இந்த ஆண்டு வருமானத்தை வாரிக்கொள்ளும் ஆண்டாக அமையும்.

தொழிலதிபர்கள்: மருத்துவமனை, லாட்ஜ், ஓட்டல், டிராவல் ஏஜென்சி, டிபார்ட்மென்டல் ஸ்டோர், நிதி, கல்வி நிறுவனம், பால்பண்ணை, அரிசி ஆலை, அச்சகம் நடத்துவோர், டெக்ஸ்டைல்ஸ், பிளாஸ்டிக், மின்சார மின்னணு சாதனம், வாகன உதிரிபாகம், தோல், கட்டுமானப் பொருள் உற்பத்தி செய்பவர்கள் தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்குவார்கள். லாபம் நன்றாக இருக்கும். மற்ற தொழில் செய்வோருக்கு லாபத்தில் குறைவில்லை என்றாலும், நிர்வாக நடைமுறைச்செலவு கூடும். சேமிக்கும் அளவு வருமானம் பெருகும். விரிவாக்கப் பணிகள் சிறப்பாக நடக்கும். தொழில் தொடர்பான சில விவகாரங்களுக்கு அனுகூல தீர்வு கிடைக்கும்.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, தோல், பிளாஸ்டிக், காய்கறி, பழம், மின்சார, மின்னணு சாதனங்கள், பால்பொருள், வாகனம், ஆட்டோமொபைல் உதிரி பாகம், கட்டுமானப் பொருள், அழகு சாதனம், ஸ்டேஷனரி, மருந்து, பாத்திரம், அழகு சாதனம், பால் பொருட்கள், இசைக்கருவிகள், கம்ப்யூட்டர், மலர் விற்பனை செய்பவர்களுக்கு விற்பனை அதிகமாகி நல்ல லாபம் கிடைக்கும். மற்ற வியாபாரிகளுக்கு போட்டி பெருமளவு குறையும். சரக்கு பாதுகாக்கும் இடங்களில் பாதுகாப்பு நடைமுறைகளை கவனமாகப் பின்பற்ற வேண்டும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் பாராட்டுதலைப் பெறுவர். கடந்த காலங்களில் பெற்ற அவப்பெயர் விலகி புதிய கவுரவம் கிடைக்கும். சக பணியாளர்கள் பணிகளில் போதுமான ஒத்துழைப்பைத் தருவர். சம்பளஉயர்வு, விரும்பிய இடத்துக்கு மாற்றம், வீடு கட்டுதல், சுபநிகழ்ச்சிகளுக்கான கடன் கிடைத்தல் என சூப்பர் ஆபர்களை பெறுவர். மே மாதத்துக்கு பிறகு வரும் குரு பெயர்ச்சியால், பணத்தட்டுப்பாடு வரலாம் என்பதால், ஆடம்பரச்செலவைக் குறைத்து கடன் தொந்தரவில் இருந்து விடுபடலாம்.

பெண்கள்: பணிபுரியும் பெண்களுக்கு நிர்வாகத்தின் பாராட்டு கிடைக்கும். பணிகளை விரைந்து முடித்து சலுகைகளை வாரிக் குவிப்பீர்கள். கடன் வசதி எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். குடும்பப் பெண்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு குடும்ப பொறுப்புக்களை நிறைவேற்றுவர். கணவரின் அன்பு, பாராட்டு கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தியை அதிகரிப்பர். லாபம் நன்றாக இருக்கும். தாராள பணவரவால் சேமிப்பு உயரும்.

மாணவர்கள்:மருத்துவம்,இன்ஜினியரிங், சட்டம், கலை, அறிவியல், கம்ப்யூட்டர், ஆசிரியர் பயிற்சி, கேட்டரிங், விவசாயம், கம்ப்யூட்டர், மேனேஜ்மென்ட் துறை மாணவர்கள் சிறப்பாக படித்து அதிக மதிப்பெண் பெறுவர். பிற துறை மாணவர்கள் இவர்களை விட சிறப்பாக படிப்பர். ஆரம்பக்கல்வி, மேல்நிலை மாணவர்கள் வெற்றியின் விளிம்பில் இருக்கிறார்கள். வெளியிடங்களில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். பெற்றோரின் அன்பும் கண்டிப்பும் உங்களுக்கு நன்மை தரும்.

அரசியல்வாதிகள்: உற்சாகமுடன் செயல்படுவீர்கள். எதிர்வருகிற சூழ்நிலை நன்மையாக மாறும். ஆதரவாளர்களுக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். எதிரிகளால் வரும் சிரமங்களை சரிசெய்ய மனத்துணிவு, கிரக நல்லருள் துணைநிற்கும். குடும்பத்தில் திட்டமிட்ட சுபநிகழ்ச்சி, தாராள செலவில் நடத்துவீர்கள்.

விவசாயிகள்: விவசாயப்பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த வகையில் மகசூல் சிறப்பாகும். தானியங்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும்.
கால்நடை வளர்ப்பில் பராமரிப்புச்செலவு கூடும். நில பிரச்னையில் நல்ல தீர்வு பெறுவீர்கள்.

குருபெயர்ச்சி : ராசிக்கு 5,8 க்கு அதிபதியான குரு, மே 16 வரை மேஷத்தில் சஞ்சரிக்கிறார். பின் ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதனால், ஆண்டின் முற்பகுதியில் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.   பூர்வீகச் சொத்தில் வளர்ச்சி உண்டாகும். பிள்ளைகள் கல்வி, வேலைவாய்ப்பில் சிறப்பிடம் வகிப்பர்.  மே17 முதல் குருவின் 5,7,9 ஆகிய பார்வைகள் ராசிக்கு 2,4,6 ஆகிய ஸ்தானங்களில் பதிகின்றன. இதனால், ஆண்டின் பிற்பகுதியில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். வரவும் செலவும் சமமாக இருக்கும். எதிர்பார்த்த பதவிஉயர்வு கிடைக்கும். வீடு, வாகன வகையில் வளர்ச்சி ஏற்படும். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் விலகிச் செல்வர். கடனை அடைக்கும் முயற்சியில் வெற்றி உண்டு. நோயிலிருந்து விடுபட்டு மனநிம்மதி பெறு வீர்கள்.

ராகுகேது பெயர்ச்சி : ராசிக்கு நான்காம் வீடான விருச்சிகத்தில் ராகு இருப்பதால், அடிக்கடி கோபம், வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புண்டு. எந்தச் செயலையும் நிறைவேற்ற அதிக கவனம் தேவைப்படும். பணி விஷயமாக, சிலர் வெளியூர், வெளிநாடு சென்று அவதிப்பட வாய்ப்புண்டு. மே 17ல் ரிஷபகுருவால், ராகுவால் உண்டாகும் பிரச்னை பெருமளவில் குறையும். ஆண்டின் இறுதியில் (டிசம்பர் 2) ராகு அனுகூலம் தரும் வகையில் மூன்றாம் வீடான துலாம் ராசிக்கு செல்கிறார். இதனால் நன்மை உண்டாகும்.  கேது ராசிக்கு பத்தாம் வீட்டில் அனுகூலமற்று இருக்கிறார். புதிய முடிவுகளை  @யாசித்து எடுப்பது அவசியம். ஆரோக்கியக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. குருவின் ரிஷப மாறுதலால், கேதுவுடன் குருவின் சேர்க்கை உண்டாகிறது. இதனால், ஆன்மிக வழியில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆண்டின் இறுதியில் டிச.2ல் கேது ராசிக்கு ஒன்பதாம் இடமான மேஷத்திற்குப் பெயர்ச்சியாகிறார்.

பரிகாரம் : சிவனை வழிபடுவதால் நன்மைகள் மேலும் அதிகரிக்கும்.

பரிகாரப் பாடல்
உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர்ச் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !