கன்னி (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை1,2)
கலர் கலரா கனவு நனவாக காத்திருங்க! (60/100)
எதிலும் நிதானத்தைக் கடைபிடிக்கும் கன்னிராசி அன்பர்களே!
பிரதான கிரகங்களில் குருபகவான் மே மாதம் பாக்ய ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகி உங்கள் வாழ்வு வளம் பெற உதவுவார். ராகுவும் உதவிக்கு இருக்கிறார். சனியின் ஏழரைக் காலத்தின் கடைசி பகுதியும், கேதுவின் சஞ்சாரமும் சரியில்லாத நிலையில் உள்ளது. மனதில் புத்துணர்வும் சாந்தமும் அதிகரிக்கும். துவங்கும் செயல்கள் வெற்றி பெறும். இடம், பொருள் அறிந்து பேசி சமூகத்தில் நற்பெயர் பெறுவீர்கள். தம்பி, தங்கைகளுக்கு திட்டமிட்ட மங்கல நிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும். பணவரவு நன்றாக இருக்கும். வீடு, வாகன வகையில் விரும்பிய மாற்றம் செய்வீர்கள்.
வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. தாய்வழி சொந்தங்கள் உங்களை நன்மதிப்புடன் நடத்துவர். பூர்வசொத்தில் வருகிற உபரி வருமானம் குடும்பத்தேவையை நிறைவேற்ற பெரிதும் உதவும். புத்திரர்கள் உங்கள் சொல் கேட்டு நடந்து படிப்பு, நல்ல நடத்தையில் சிறந்து விளங்குவர். இஷ்டதெய்வ அருள் பரிபூரண துணைநிற்கும். உடல்நலம் சுமாராக இருக்கும். உங்கள் கனவுத்திட்டங்கள் நிறைவேற குருபெயர்ச்சி வரை காத்திருக்க வேண்டும்.கடன்களால் நிம்மதி இல்லாமல் இருக்கும். வழக்கு, விவகாரங்களில் அனுகூலமான நன்மை ஏற்படும். கணவன், மனைவி பாசத்துடன் நடந்து குடும்ப பொறுப்புக்களை நிறைவேற்றுவர். நண்பர்களின் உதவியை எதிர்பார்க்க இயலாது. பயணங்களில் பாதுகாப்பு நடைமுறை பின்பற்ற வேண்டும். அடுத்தவர்கள் சொல்லும் ஆலோசனையை யோசிக்காமல் செயல்படுத்தினால் பிரச்னை பெரிதாகும். பசு, பால் பாக்ய யோகமும் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சியும் சிறப்பாக அமையும். வெளியூர் பயணத்தின் போது நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் உதவி கேட்டு நச்சரிப்பர். கேட்கும் உதவியை செய்யாவிட்டாலோ, செய்ய முடியாமல் போனாலோ கருத்து வேறுபாடு ஏற்படும்.
தொழிலதிபர்கள்: மருத்துவமனை, லாட்ஜ், ஓட்டல், டிராவல் ஏஜென்சி, டிபார்ட்மென்டல் ஸ்டோர், நிதி, கல்வி நிறுவனம், பால்பண்ணை, அரிசி ஆலை, அச்சகம் நடத்துவோர், டெக்ஸ்டைல்ஸ், பிளாஸ்டிக், மின்சார மின்னணு சாதனம், வாகன உதிரிபாகம், தோல், கட்டுமானப் பொருள் உற்பத்தி செய்பவர்கள் புதிய நடைமுறையைப் பின்பற்றி நல்ல வளர்ச்சியும் வருமானமும் பெறுவர். துணைத்தொழில்கள் சில தொடங்குவதற்கு வாய்ப்புண்டு. புதிய தொழில்நுட்ப இயந்திரங்களை வாங்கி உற்பத்தியை பெருக்குவர். தரமும் அதிகரிக்கும். வருமானம் உயரும். எவ்வளவு வருமானம் வந்தாலும் நிர்வாகச் செலவு என்ற பெயரில் செலவு அத்துமீறும். தொழிலதிபர் சங்கங்களில் சிலருக்கு பதவிப்பொறுப்புகிடைக்கும்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, தோல், பிளாஸ்டிக், காய்கறி, பழம், மின்சார, மின்னணு சாதனங்கள், பால்பொருள், வாகனம், ஆட்டோமொபைல் உதிரி பாகம், கட்டுமானப் பொருள், அழகு சாதனம், ஸ்டேஷனரி, மருந்து, பாத்திரம், பர்னிச்சர், விவசாய இடுபொருள் விற்பனை செய்பவர்கள் விற்பனையைப் பெருக்க கூடுதல் மூலதனம் செய்வீர்கள். ஆண்டின் ஆரம்பத்தில் சுமாரான விற்பனையும், பின்னர் வளர்ச்சி நிலையும் உண்டாகும். சரக்கு வாகன வகையில் அபிவிருத்தி உண்டு.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு குழப்பமான நிலை மாறி உற்சாகத்துடன் செயல்படுவர். வேலைகளை வேகமாக முடித்து நிர்வாகத்திடம் நற்பெயரை பெறுவர். சக பணியாளர்கள் கருத்து வேற்றுமை மறந்து நற்பண்புடன் நடந்துகொள்வர். குடும்பத்தேவைகளை நிறைவேற்றும் அளவிற்கு பணியின் மூலம் உபரி வருமானம் கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் ஏற்படும். விண்ணப்பித்த கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சிலர் வேறு தொழிலுக்கு மாறுவது பற்றி யோசிப்பர்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் வேகமாக பணிகளை முடித்து நிர்வாகத்திடம் நன்மதிப்பு, சலுகை பெறுவர். சிலருக்கு பதவி உயர்வினால் நிர்வாக அந்தஸ்து கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பைப் பெறுவர். குடும்பப் பணிகளில் ஆர்வம் வளரும். வீட்டுச்செலவுக்கு தேவையான பணவசதி இருக்கும். புத்திரர்களின் செயல்திறன் வளர உறுதுணை புரிவீர்கள். சுயதொழில் புரியும் பெண்கள் சுமாரான உற்பத்தி, விற்பனை காண்பர்.
மாணவர்கள்: மருத்துவம், இன்ஜினியரிங், சட்டம், கலை, அறிவியல், கம்ப்யூட்டர், ஆசிரியர் பயிற்சி, கேட்டரிங், விவசாய வங்கியியல், ஆடிட்டிங், ஆசிரியர், சட்டம், பிரிண்டிங் டெக்னாலஜி, மேனேஜ்மென்ட் துறை சார்ந்த மாணவர்கள் சுற்றுப்புற விஷயங்களில் ஆர்வம் கொள்வதால் படிப்பில் கவனச்சிதறல் ஏற்படும். பொறுப்பை உணர்ந்து செயல்படுவதால் மட்டுமே படிப்பில் சிறந்த தேர்ச்சி கிடைக்கும். சக மாணவர்களிடம் கருத்துபேதம் வராத அளவிற்கு செயல்பட வேண்டும். படிப்புக்கான பணவரவுக்கு பொறுமையுடன் காத்திருப்பீர்கள்.
அரசியல்வாதிகள்: கட்சி தலைமை எடுத்த நடவடிக்கையில் இருந்து விடுபடுவீர்கள். அரசியல்பணி சிறந்து புதிய பதவிப் பொறுப்பு பெறுவீர்கள். ஆதரவாளர்கள் அதிக மதிப்புடன் உங்களை அணுகுவர். வழக்கு, விவகாரங்களில் சாதக நிலை உண்டு. பொது விவகாரங்களில் தலையிட்டு தீர்வு ஏற்படுத்தி அதனால் லாபம் அடைவீர்கள். புத்திரர்களின் உதவியும் அரசியல் பணிக்கு சிறப்பு சேர்க்கும்.
விவசாயிகள்: மகசூல் அதிகரித்து மகிழ்ச்சியை உருவாக்கும். தாராள பணவரவு கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் லாபம் உண்டு. நிலம் தொடர்பான சிரமம்குறையும்.
குருபெயர்ச்சி : ராசிக்கு 4,7 க்கு அதிபதியான குரு, மே 16 வரை மேஷத்தில் சஞ்சரிக்கிறார். பின் ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதனால், ஆண்டின் முற்பகுதியில் பணியில் தடுமாற்றம், தடங்கல், ஆரோக்கியக்குறைவு உண்டாகும். எந்தச்செயலையும் பொறுமையுடன் அணுகுவது அவசியம். மே17 முதல் குருவின் 5,7,9 ஆகிய பார்வைகள் 1,3,5 ஆகிய ஸ்தானங்களில் விழுகின்றன. ஒன்பதாம் இடத்தில் குரு இருப்பதால், ஆண்டின் பிற்பகுதியில் நன்மை உண்டாகும். மனதில் தைரியம் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களின் ஆதரவு உண்டு. பூர்வீக சொத்தில் வருமானம் கூடும். நோய் நொடி விலகி ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முதனிலை காண்பர். தொழில், பணியில் நல்ல முன்னேற்றம்
ஏற்படும்.
ராகுகேது பெயர்ச்சி : ராசிக்கு மூன்றாம் வீடான விருச்சிகத்தில் ராகு வீற்றிருக்கிறார். இதனால், புதிய முயற்சியில் வெற்றியும், அதற்கேற்ப ஆதாயமும் கூடும். வீடு, வாகன வகையில் நவீன மாற்றம் செய்வீர்கள். திடீர் வாய்ப்புகளால் மகிழ்ச்சி உண்டாகும். மே 17ல் ரிஷபகுருவால், ராகுவால் உண்டாகும் அனுகூலபலன் மேலும் அதிகரிக்கும். ஆண்டின் இறுதியில் (டிசம்பர் 2) ராகு ராசிக்கு இரண்டாம் வீடான துலாமில் பிரவேசிக்கிறார். கேது ஆண்டு முழுவதும், ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அனுகூலமற்று இருக்கிறார். இதனால், முக்கியமான பொறுப்புகளை நேரடி கவனத்தில் வைத்துக் கொள்வது நல்லது. பணம் சார்ந்த விஷயத்தில் பாதுகாப்பு மிக தேவை. மனதில் காரணமற்ற பயம் உண்டாகும். குருவின் ரிஷப மாறுதலால், கேதுவின் கெடுபலன் வெகுவாக குறையும். ஆண்டின் இறுதியில் கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடமான மேஷத்திற்குப் பெயர்ச்சியாகிறார்.
பரிகாரம் : கிருஷ்ணரை வழிபடுவதால் சகல வளமும் கிடைக்கும்.
பரிகாரப் பாடல்
மண்ணில் பிறந்த மண்ணாகும்
மானிடப் பேரிட்டு அங்கு
எண்ணம் ஒன்றின்றி இருக்கும்
ஏழை மனிசர்காள்! கண்ணுக்கினிய
கருமுகில் வண்ணன் நாமமே!
நண்ணுமின் நாரணன் தம்
அன்னை நரகம்பு காள்.